தி.மு.க தலைவர் இறுதி வணக்கம்

தி.மு.க தலைவர் அவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்

மண் வளம் காக்கும் நெல் விளைச்சலைப் பெருக்கி, இயற்கை வேளாண்மை வாயிலாக புதிய விடியலை உருவாக்கி வந்த ‘நெல்’ இரா.ஜெயராமன் அவர்கள் இன்றைய விடியலுக்கு முன்பாகவே இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி அறிந்து, அவரது உடலுக்கு இறுதி வணக்கம் செலுத்தினேன்.

காவிரி டெல்டாவான திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை அடுத்த கட்டிமேடு கிராமத்தில் பிறந்த ஜெயராமன், 169 வகையான பாரம்பரிய நெல் வகைகளை மீட்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வழியில் செயல்பட்டவர். 5 ஏக்கர் பரப்பளவில் பாரம்பரிய நெல் ஆராய்ச்சிக்கான பண்ணையை நிறுவி, அதில் வெற்றிகரமாக விளைச்சலை உண்டாக்கி, நம்மாழ்வார் அவர்களால் ‘நெல்’ ஜெயராமன் எனப் பெயர் சூட்டப்பட்டவர்.

ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் கண்காட்சியை நடத்தி இன்றைய தலைமுறையினரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடத் தூண்டியவர். அவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் சிகிச்சைப் பெற்று வந்த நெல் ஜெயராமனை சில நாட்களுக்கு முன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவருக்கு நிதியுதவியும் அளித்து வந்த நிலையில், நெல் ஜெயராமன் மறைந்துவிட்டார் என்ற செய்தி அதிகாலையில் இடி தாக்கியது போல அமைந்தது.

தமிழ்நாட்டின் மண் வளம் காக்க தன் வாழ்வை அர்ப்பணித்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு என் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இறுதி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர் பிரிவால் துயர்ப்படும் குடும்பத்தினர், நண்பர்கள், இயற்கை ஆர்வலர்கள் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இயற்கையை சீர்கெடச் செய்யாமல் அதனை மேம்படுத்தும் வழிகளை நாம் மேற்கொள்வதே நெல் ஜெயராமனுக்கு என்றென்றும புகழ் சேர்க்கும் பணியாக அமையும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *