
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்பது நவக்கிரககோவில்களில் திருநாகேஸ்வரம் கோவிலும் ஒன்றாகும்.இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 29 ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.
இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது.
கோயிலின் சிறப்பு
இக்கோவில் 2000ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில் என்றாலும் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தக சோழனால் நன்கு சீர்திருத்தி கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது.இங்குச் சிவபெருமான் “நாகநாதர்” எனவும், பார்வதி தேவி “கிரிஜா குஜாம்பிகை” எனவும் அழைக்கப்படுக்கிறார்கள்.
இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், இங்குத் திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை – குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலைக் கட்டி அதற்குத் திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார் என்றால், அவருக்கு இந்த ஆலயத்தின் மீது எந்த அளவுக்குப் பக்தியும் மரியாதையும் இருந்திருக்கும் என்பதை உணரலாம். நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய விசேழ தலம் என்ற பெருமை உடையதாகும். சண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது.
புராணங்களி படி கூறுவது என்னவென்றால் பாதாள லோகத்திலிருந்து நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் ஒருமுறை சிவபெருமானை வேண்டித் தொழுவதற்காக இந்தச் சண்பகவனம் வந்தான். இங்கு ஒரு தீர்த்தம் ஏற்படுத்தி, அதன் கரையில் அமர்ந்து கடும் தவம் செய்தான். ஆதிசேஷனின் இடையறாத தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அவனுக்குக் காட்சியளித்தார். எனவே நாகராஜனுக்கு அருளிய மூலவர் நாகநாதசுவாமியென அழைக்கப்பட்டார். அவன் உருவாக்கிய தீர்த்தம் நாகதீர்த்தம் ஆனது. இராகு, தட்சகன், கார்கோடகன், ஆதிசேஷன், வாசுகி வழிபட்ட தலம் ஆகும்.
மன்றொரு காரணம் ஓரு முறை முனிவரின் ஒருவரின் மகனைப் பாம்பாக இருந்த “ராகு பகவான்” தீண்டியதால், அந்த முனிவரின் சாபம் பெற்று தன் சக்திகள் அனைத்தையும் இழந்தார் ராகு. இதனால் இத்தலத்திற்க்கு வந்து தவம் இருந்து சிவபெருமானின் அருள் பெற்று தன் சக்தியைப் பெற்றார் ராகு பகவான்.நகத்தின் வடிவில் ராகுபகவனுக்கு காட்சி அளித்ததால் சிவபெருமான் “நாகநாதர்” என அழைக்கப்படுக்கிறாரெனப் புரணாக்கள் கூறுக்கின்றன.
“நாக தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம்”. சிறந்த சிவபக்த கிரகமாகிய இராகு சில இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும் நாகநாதசுவாமி கோயிலின் இரண்டாவது பிரகாரம் தென்மேற்கு மூலையில் நாகவல்லி, நாகக்கன்னி ஆகிய தன் இரு தேவிமாருடன் மங்கள ராகுவாகத் தனிக்கோயிலில் அமர்ந்து காட்சி அளிக்கின்றார். இவருக்கு உகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலைமீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல்மீது வரும்போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம். இவருக்கு உகந்த மலர் மந்தாரை ஆகும்.
1986ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் நாள் ராகு பகவானின் மீது ஐந்தரை அடி நீளமுள்ள நாகமானது தனது சட்டையை மாலையாக இராகு பகவானுக்கு அணிவித்து இவரது பெருமையை உலகிற்கு உணர்த்தியது. இது இறைவனைத் தரிசிக்க வரும் பக்தர்கள் பார்வைக்குக் காட்சிப் பொருளாகக் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது.இது பஞ்சகுரோசத்தலங்களில் ஒன்றாகும்.பெரிய கோயில். நான்கு வாயில்கள். இறைவனுக்கு அருகில் உள்ளது பிரையணிநுதலாள் சந்நிதி. கிரிகுஜாம்பிகை சந்நிதி, தனிக்கோயிலாக விளங்குகிறது. சுதை உருவம். எனவே அபிஷேகம் கிடையாது. தை மாதத்தில் மட்டும் புனுகு சாத்தப்படுகிறது.
தொன்மை
ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான். உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்கத் தலை வேறு உடல் வேறாகி விழுந்தான். ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.
மற்ற கோவில்களில் ராகு பகவான் நாக உருவத்தில் காட்சி அளிக்கும்பொழுது இக்கோவிலில் மட்டும் அவர் மனித முகத்துடன் தோன்றுவது சிறப்பாகும். கோவிலுக்குள் சில மண்டபங்களும், உயரமான கோபுரங்களும், பெரிய பிரகாரமும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலானது கோட்டைச் சுவர்களைப் போல் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தை ஒட்டிக் கோபுரங்கள் அமைந்துள்ளன. தென்மேற்குப்பகுதியில் ராகுபகவானின் சிலை உள்ளது. கோவிலின் தென்பகுதியில், நான்கு மண்டபங்களால் சூழப்பட்ட திருக்குளம் இருக்கிறது. இது தேரின் அமைப்பில் கட்டப்பட்ட 100 தூண்களைக் கொண்ட மண்டபத்தால் சூழப்பட்டுள்ளது. கோவிலானது சோழர் கால கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது. ராகு காலத்தில் தினந்தோறும் ராகுவுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பாலாபிஷேகத்தின்போது, பாலானது ராகுவின் மேல் பட்டு வழியும்போது அது நீல நிறமாக மாறுவதை அனைவரும் கண்டு அதிசயிக்கலாம்.
புராண பெயர்கள் : சண்பக வனம், கிரிகன்னிகை வனம்
இக்காலப் பெயர் : திருநாகேச்சரம் நாகநாதசுவாமி திருக்கோயில்
மூலவர் : நாகேசுவரர், நாகநாதர், சண்பகாரண்யேசுவரர்
தாயார் : பிறையணிநுதலாள், கிரிகுஜாம்பிகை
தல விருட்சம் : சண்பகம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம் உட்பட பன்னிரு தீர்த்தங்கள்
பாடல் வகை : தேவாரம்
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
கோவில் நடை திறப்பு நேரம் காலை 6.00 மணிமுதல் மதியம் 12.45 மணிவரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை
கோவில் அமைவிடம்
திருநாகேஸ்வரம் அருள் மிகு நாகநாதசுவாமி திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ளது.இக்கோவிலுக்கு பேருந்து வசதியானது தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள எல்லா ஊர்களிலிருந்து வரும் படி பேருந்து வசதி உள்ளது.
திருநாகேசுவரம் நாகநாதசுவாமி (ராகு)கோயில் செல்லும் மேப் link
இரயிலி வருபவர்கள் திருவிடைமருதூர் இரயில் நிலையத்திற்க்கு வந்து அங்கிருந்து பேருந்து அல்லது வாடகை வண்டிமூலம் இக்கோவிலுக்கு செல்லலாம்.