திமுக அணியில் இருக்கிறோம்

திமுக அணியில் இருக்கிறோம்; வெற்றிக்காகப் பாடுபடுவோம்!
திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தபின் வைகோ பேட்டி

ஏழு பேர் விடுதலை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிதிபதி ரஞ்சன் கோகாய், மத்திய அரசு ஆட்சேபனை செய்த மனுவை எல்லாம் தள்ளுபடி செய்துவிட்டு, தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று அறிவித்தபிறகு, இந்திய அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவின்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஏழு பேரையும் விடுதலை செய்திருக்க வேண்டும். செப்டம்பர் 6 ஆம் தேதி தலைமை நீதிபதி தீர்ப்பு. செப்டம்பர் 9 ஆம் தேதி ஒப்புக்கு, கண் துடைப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி ஒரு தீர்மானத்தைப் போட்டு அனுப்பினார்கள்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக அறிவித்து, விடுதலை செய்வது தமிழ்நாடு அரசின் முடிவு என்று கூறினார்.

பிளசண்ட் டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு தண்டனை என்பதால் தமிழ்நாடு முழுவதும் தீ வைத்துக் கொளுத்துங்கள் என்று அண்ணா தி.மு.க., தலைமையிலிருந்து சென்ற உத்தரவில் தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் ஹேமலாதா, கோகிலவாணி, காயத்திரியென மூன்று வேளாண் கல்லூரி மாணவிகளைப் பெட்ரோலை ஊற்றி, கதற கதற உயிரோடு நெருப்பிலே கருக்கி சாகடித்து, 16 மாணவிகளுக்கு மரண காயம் ஏற்படுத்தினார்கள். தனக்கு ஏற்பட்ட தண்டனைக்காகக் கொளுத்திய இந்த மூன்று பேரையும் தூக்கிலிருந்து தப்புவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் சாந்தன், முருகன், பேரறிவாளன் மூன்று பேரின் தூக்கை ஆயுள் தண்டனையாக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் 2011 ஆகஸ்டு 30 ஆம் தேதி ஜெயலலிதா தீர்மானம் போட்டார்.

முதல் நாள் ஆகஸ்டு 29 ஆம் தேதி அதே சட்டமன்றத்தில், ஒரு அரசியல் கட்சித் தலைவர், முதலமைச்சருக்கு அரசியல் சட்டப்படி அதிகாரம் இருக்கிறது என்று பேசி வருகிறார். இனிமேல் அவர் இப்படி பேசக் கூடாது. எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜனாதிபதியிடம் செல்லுங்கள் என்று ஜெயலலிதா பேசினார்.

ராம்ஜெத்மலானியை அழைத்துவந்து உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றாகிவிட்டது என்று தெரிந்தவுடன், அதே சட்டமன்றத்தில் இந்த மூன்று பேர் தூக்குத்தண்டனையைக் குறைத்து, கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனை ஆக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார் ஜெயலலிதா. அண்ணா தி.மு.க.வினரை தூக்கிலிருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்றுதான் இந்தத் தீர்மானத்தைப் போட்டார்கள். தற்போது அந்த மூன்று பேரையும் விடுதலை செய்துவிட்டார்கள்.

அண்ணன் ரத்தினவேல் பாண்டியன், பெரியவர் செல்லப்பாண்டியன் ஆகியோரிடம் கிரிமினல் பிரிவு ஜூனியர் வழக்கறிஞராக இருந்திருக்கிறேன். மென்சிரியா என்பது என்ன? ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுத்ததனால் தீயிட்டுக் கொளுத்துங்கள் என்று மேலிடத்து உத்தரவின் பேரில் மூன்று பேரைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதுதான் மென்சிரியா.

தலைமை நீதிபதி உத்தரவுப்படி தமிழ்நாடு அரசு முடிவெடுக்கலாம் என்றதற்குப் பின்பு, தமிழ்நாடு அமைச்சரவை 9 ஆம் தேதி தீர்மானம் அனுப்பிய பிறகு, மத்திய அரசின் உள்துறைக்கு யார் அனுப்பியது? எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அனுப்பி, அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார்களா? ஆளுநரே நேரடியாக அனுப்பினாரா? இதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆளுநர் மாளிகை, இது கூட்ட வெறியில் நடந்தது. முன் விரோதம் இல்லை என்று அறிக்கையில் கூறியிருக்கிறது. இப்படியொரு தவறான விளக்கத்தை இந்த ஆளுநரைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.

தலைமை நீதிபதி கூறியதை மீறி ஆளுநர் நடந்துகொண்டிருக்கிறார். எனவே இவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிய வேண்டும்.

ஆளுநர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து, போட்டி அரசாங்கம் நடத்துகிறார். 15 நாட்களுக்கு ஒருமுறை பத்திரிகை முதலாளிகளுக்கு விருந்து வைக்கிறார். பெண் பத்திரிகை நிருபரின் கன்னத்தைக் கிள்ளுகிறார். இந்த ஆளுநர் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. தமிழ்நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். ஏழு பேர் விடுதலையைத் தடுத்து நிறுத்திக்கொண்டு இருக்கக்கூடிய மோடி அரசாங்கத்தின் கங்கானியும், ஏஜெண்டுமான பன்வரிலால் புரோகித்தை வெளியேற்ற வேண்டும் என்பது எங்களுடைய விளக்கம்.

நாங்களும், திராவிடர் கழகமும் சேர்ந்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்துவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் – மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்னுடைய அன்புச் சகோதரர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தேன். 70 அமைப்புகளுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறேன்.

இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய அன்புச் சகோதரர், 1964, 65 கால கட்ட என்னுடைய உயிர் நண்பர் துரைமுருகன் கூட்டணியில் மதிமுக இல்லை என்று ஒரு பதிலைச் சொல்லிவிட்டார்.

நீங்கள் கூட்டணியில் இல்லை என்று துரைமுருகன் சொல்லியிருக்கிறாரே? எனபத்திரிகையாளர்கள் என்னிடம் கேட்டார்கள். திமுக தலைவர் அதற்கு விளக்கம் தருவார் என்று நான் கூறிவிட்டேன்.

ஆதரவு கேட்டு நாங்கள் அனுப்பிய கடிதத்திற்கு உடனடியாகப் பதில் கடிதம் அனுப்பி, 3ஆம் தேதி ம.தி.மு.க.வும், தி.க., வும் நடத்துகிற போராட்டத்துக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய முழு ஆதரவையும் தரும் என்று கூறியிருக்கிறார் அல்லவா? அதுதான் விளக்கம்.

இரண்டு நாட்களாக நான் ஊடகங்களைக் கவனித்துகொண்டு இருக்கிறேன். திமுக தலைமையிலான கூட்டணியில் எப்படியாவது ஒரு நெருடலை ஏற்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். என் பெயரையே போடாத பத்திரிகை, “முதலமைச்சர் ஆக்குவேன் என்று தளபதிக்கு நான் நாற்காலி தூக்குகிறேனாம்! தளபதியும், துரைமுருகனும் பார்க்கிறார்களாம்! கூட்டணி நூல் அறுந்துவிட்டதாம். வைகோ விரக்தி. வடை” என்று என்னைக் குறிப்பிட்டு கார்டூன் போட்டிருந்தது. பாட்டி, வடை கதை சின்னப் பிள்ளையாக இருந்தபோது படித்திருக்கிறேன். நானும் ஓரளவுக்குத் தமிழ் படித்திருக்கிறேன். விரக்தி, வடை என்றால் என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. அந்தப் பத்திரிகைக்கு மிகவும் நன்றி. அப்படியாவது அந்தப் பத்திரிகையில் நமது பெயரைப் போட்டிருக்கிறார்களே என்று மகிழ்ச்சி.

தமிழகத்தை நாசமாக்கிக்கொண்டிருக்கிற அண்ணா தி.மு.க. அரசு, தமிழ்நாட்டுக்குக் கேடு செய்கிற அரசு, மத்திய அரசின் கங்கானியாக வேலை பார்க்கிற அரசு, முதுகெலும்பற்ற முதலமைச்சர். அதனால்தான் ஸ்டெர்லைட்டில் மக்களை நாசப்படுத்தியதற்கு வேதாந்தா குழும அதிபர் அனில் அகர்வாலுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய நரேந்திர மோடி அரசு இரண்டு அனுமதி கொடுத்திருக்கிறது.

ஸ்டெர்லைட் வழக்கில் 22 ஆண்டுகளாக நான் போராடிக்கொண்டு இருக்கிறேன். 3 மணி நேரம் உயர்நீதிமன்றத்தில் வழக்காடி 2010 செப்டம்பர் 28இல் ஆலையை நிறந்தரமாக மூட நீதியரசர்கள் எலிபி தருமராவ், பால்வசந்தகுமார் தீர்ப்பு அளித்தனர்.

வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் தடையாணை வாங்கி மூன்று வருடங்களாக வழக்கு நடந்தது. நானும், வழக்கறிஞர் தேவதாஸ் அவர்களும் சென்றோம். 2014 ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு. நானும் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கிறேன். பட்நாயக், கோகலே அமர்வு. சக்திவாய்ந்த நிறுவனங்களை எதிர்த்து வழக்குப் பதிவு செய்து போராடியவர்களின் பொதுநல நோக்கத்தைப் பாராட்டுகிறேன் என்று ஒரு பத்தி என்னைப் பாராட்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று தலையில் கல்லைப் போட்டுவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறந்தாகிவிட்டது. தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் நானும் வழக்குத் தொடுத்தேன். தமிழக அரசும் வழக்குத் தொடுத்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி சொக்கலிங்கம் முன்பு ஒன்றரை மணி நேரம் வாதாடினேன்.

தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வு டெல்லியில் இருக்கிறது. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சுதந்திரகுமார் அதற்குத் தலைவராக இருந்தார். நான் வாதாடிய மறுநாள் திடீரென்று இந்த ஸ்டெர்லைட் வழக்கு டெல்லி தலைமை அமர்வுக்கு மாற்றப்படுகிறது என்றார். நீதிபதி சொக்கலிங்கம், இது தமிழ்நாட்டு வழக்கு. ஏன் இங்கேயிருந்து டெல்லிக்கு மாற்றினார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று தீர்ப்பாய விசாரணையில் கூறினார்.

பின்பு நான் டெல்லிக்குச் சென்றேன். நான் ஸ்டெர்லைட் ஆலையைக் கடுமையாக எதிர்க்கிறேன் என்பதால் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தலைவர் நீதிபதி சுதந்திரகுமார் என்னை மிகவும் ஏளனம் செய்தார். நான் எழுந்து பேச ஆரம்பிக்கும்போது, You are a Lawyer don’t you know that you should come to the front row என்றார். இரண்டாவது வரிசையிலிருந்தும் சொல்லலாம் என்று எனக்குத் தெரியும். ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் மிகவும் நஷ்டமாகிவிட்டது. விரைவில் திறக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அரிமாசுந்தரம் கூறினார். ஆலையைத் திறப்பதற்கு 15 நாளில் நான்தான் உத்தரவு போடப்போகிறேனே? அதற்குள் என்ன அவசரம்? என்று நீதிபதி சுதந்திரகுமார் கூறுகிறார்.

நான் தீர்ப்பாயத்தைவிட்டு வெளியே வந்தேன். பத்திரிகை, ஊடகத்தினர் இருந்தனர். நீதித்துறை வரலாற்றிலேயே ஒரு தரப்புக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கொடுக்கப் போகிறேன். ஏன் அவசரப்படுகிறீர்கள் என்று கூறிய நீதிபதியை இதுவரை நான் பார்த்தது இல்லை. நீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டார் சுதந்திரக்குமார் என்று கூறினேன். இதுதான் முதன்மை அமர்வில் நடந்தது.

மறுபடியும் ஸ்டெர்லைட் ஆலையை ஏன் மூடினார்கள் என்றால், அந்த ஆலைக்கு அண்ணா திமுக அரசு கைக் கூலியாக வேலை பார்த்தது. முறையாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலமாகச் சோதனை செய்து, அவ்வப்போது நடவடிக்கை எடுத்து மூடும் வேலையைச் செய்யவில்லை.

மே 22 ஆம் தேதி 13 பேரைச் சுட்டுக் கொன்று இலட்சக்கணக்கான மக்கள் கொந்தளித்தவுடன், ஆலையை மூடுவதாக உத்தரவு போட்டார்கள்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில், தமிழக அரசுக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று வழக்குப் போட்டேன். நீதிபதியும் அதையே கூறினார். சட்டமன்றத்தைக் கூட்டித் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் அல்லது இந்த இந்தக் காரணங்களினால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று கேபினெட்டில் தெரிவிக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை வைத்து மூடி, மின்சார வாரியத்தின் மூலம் மின்சாரத்தைத் துண்டித்தார்கள்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் வேதாந்தா குழுமம் வழக்குப் போட்டிருக்கிறது. தலைமை அமர்வின் நீதிபதி யார் என்றால், மகா மகா பெரியவாள் நீதிபதி கோயல்.இந்தக் கோயல் உச்சநீதிமன்றத்திலிருந்து 5 மணிக்கு ஓய்வு பெறுகிறார். ஐந்தரை மணிக்குப் பசுமைத் தீர்ப்பாயத்திற்குத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று தீர்ப்பாயத்தில் கூறப் போகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் வாதாடியபோது நீதிபதிகள் என்னைக் கௌரவமாக நடத்தினார்கள். என்னைப் பற்றி அந்தத் தீர்ப்பாயம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் அந்தத் தீர்ப்பாயத்திற்குச் சென்றேன். மார்க்சிஸ்டுகளும் மற்ற இரண்டு பேரும் வழக்குப் போட்டிருந்தார்கள். அவர்களது இம்பீளீட்மெண்ட் பெட்டிசனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை ஸ்டெர்லைட் வழக்கறிஞர் அரிமா சுந்தரம். வைகோ பெட்டிசனை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அவர் பழைய சங்கதிகளை எல்லாம் எழுப்பிக் குழப்புவார் என்று கூறினார். அப்போதிருந்த நீதிபதி நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எழுத்து மூலமாகக் கொடுங்கள் என்றார்.

எழுத்துமூலம் என்ன கொடுத்தார்கள் என்றால், அவருக்கு அரசியலில் செல்வாக்கு போய்விட்டது. அரசியலில் செல்வாக்குத் தேடுவதற்காக விளம்பரத்துக்காக வழக்குப் போட்டிருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று.

அடுத்த விசாரணையில் நான் பேசுவதற்கு எழுந்தபோது, வைகோதான் இவ்வளவு தூரம் போராடுகிறார் என்று தெரிந்துகொண்டு, நீதிபதி கோயல் what do you want?? என்றார். Sir, I have filed my impleament petition என்றேன். Sit down. don’t talk என்றார் கோயல். இப்படி பேசியதை என் வாழ்க்கையில் நான் கேள்விப்பட்டது இல்லை. அந்த நீதிபதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்குவார்.

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டி போடுகிறேன் என்றார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் சிவசுப்பிரமணியன், இப்ராகிம் கலிபுல்லா இருவரில் ஒருவரைப் போடுங்கள் என்றேன். அரிமா சுந்தரம் எழுந்து, தமிழ்நாட்டு நீதிபதிகள் யாரையும் போடக் கூடாது. அப்படிப் போட்டால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அவர்கள் அறிக்கை கொடுப்பார்கள் என்றார். உலகப் புகழ்பெற்ற நீதிபதிகள் தமிழ்நாட்டு நீதிபதிகள். நடுநிலை தவறாதவர்கள். இவர் எப்படி தமிழ்நாட்டு நீதிபதிகளை நீதியில்லாதவர்கள், ஒரு சார்பாக இருப்பார்கள் எனக் கூறலாம் என்று எதிர்ப்புத் தெரிவித்தேன். நீதிபதி கோயல் நான் முடிவு செய்துகொள்கிறேன் என்று கூறி, பஞ்சாப்காரரைப் போட்டார். அவர் மறுத்துவிட்டார். மேகாலயா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தருண் அகர்வாலைப் போட்டார். அவருடன் எக்ஸ்பர்ட் கமிட்டி வந்தது. நானும் கலந்துகொள்ளலாம் என்று வந்தது. நான் தூத்துக்குடிக்கும் சென்றேன். சென்னையிலும் வாதாடினேன். என்னுடைய இம்பிளிமெண்ட் பெட்டிசனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. நீதிபதி தருண் அகர்வால் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அறிக்கை கொடுக்கப் போகிறார் என்று எனக்குத் தெரியும்.

மகாராஷ்டிரா ரத்தினகிரியில் 300 கோடி ரூபாய் செலவழித்த ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்கினார்கள். ஒருவரையும் கைது செய்யவில்லை. சரத்பவார் உரிமத்தை ரத்து செய்தார். இவர்கள் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றங்களுக்குச் செல்லவில்லை. ஒரு வாரத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து ஜெயலலிதாவிடம் அனுமதி பெற்றுவிட்டார்கள்.

இயற்கை நீதிக்கு விரோதம். ஆலையை மூடியதே தவறு என்று தருண் அகர்வால் கமிட்டி அறிக்கை கொடுத்திருக்கிறது. காரணம் அண்ணா திமுக அரசு. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறைப்படி தடுக்கும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கொள்கை முடிவு எடுத்திருந்தால், கேபினெட் முடிவு எடுத்திருந்தால் இந்தத் தருண் அகர்வால் இப்படிச் சொல்ல முடியாது. ஆலைக்கு ஆதரவாகவே மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செய்துகொண்டே வந்ததால், நாங்கள் கொடுத்த தேதிகளில் எல்லாம் அனுமதி கொடுத்துவிட்டார்கள். இப்பொழுது போராட்டம் நடந்ததால் திடீரென்று மூடுகிறார்கள் என்று ஆலை தரப்பு கூறுகிறது. வெளிமாநிலங்களிலிருந்து குண்டர்களைக் கொண்டுவந்து போராட்டம் நடத்தினார்கள் என்று அரிமா சுந்தரம் கூறுகிறார். எல்லாம் அந்தப் பகுதி மக்கள் என்று நான் கூறினேன்.

டிசம்பர் 7ஆம் தேதி விசாரணை என்று நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்கள். நானும் செல்வேன். கடந்த முறை போன்று நடத்தினால் நான் யார் என்பதைக் காட்டுவேன். நீதிமன்ற அவமதிப்பு, சிறைக்கு எல்லாம் பயப்படவில்லை. மக்களைக் காப்பாற்ற 22 வருடங்களாகப் போராடுகிறேன். நீதியைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள்.

ஏழு பேருக்காக ஆளுநர் மாளிகை முற்று போராட்டத்துக்குத் திமுகதிமுக தலைவர் சகோதரர் ஸ்டாலின் அவர்கள் முழு ஆதரவு என்று கடிதம் எழுதியிருக்கிறார்.

2004 நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சிறையை விட்டு வெளியே வந்து 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்தேன். 40 தொகுதிகள் வெற்றிக்கு வைகோவின் பிரச்சாரம் காரணம் என்று இந்து ஆங்கில பத்திரிகை கட்டம் கட்டி செய்தி போட்டது. அதே போல 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற நான் பாடுபடுவேன். இதை இப்பொழுது சொல்லவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறேன். கலைஞர் பிறந்தநாள் விழாவிலும் சொல்லியிருக்கிறேன். வைகோ திடீரென்று இப்படி பேசுகிறார் என்று பத்திரிகை, ஊடகங்களில் எல்லாம் கிண்டல் செய்தார்கள்.

சனாதன சக்திகளால், இந்துத்துவா, நாசகார நாரச சக்திகளால் திராவிட இயக்கத்துக்கு ஆபத்து வருகிறது. திராவிட இயக்கத்தை அழிக்கப் போலி தேசியவாதிகள் புறப்பட்டிருக்கிறார்கள். திராவிட இயக்கத்துக்காகவே வாழ்ந்துவருகிறவன் நான். அண்ணாவின் வார்ப்பு, கலைஞரின் வளர்ப்பு வார்ப்பு நான். ஆகவே எங்கள் சக்தியைத் திமுக பக்கம் நிறுத்துவேன் என்று கூறிவிட்டேன். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

கருத்துக் கணிப்பில் சகோதரர் ஸ்டாலின் அவர்களுக்கு 48 சதவிகித மக்கள் ஆதரவு இருக்கிறது. ஊடகங்கள் இதை ஏன் பெரிதாகக் காட்டவில்லை? தினத்தந்தி பத்திரிகை, தந்தி தொலைக்காட்சி, இந்தியா டுடே மட்டும்தான் வெளியிட்டன.

20 தொகுதிகளுக்கு எப்பொழுது தேர்தல் வந்தாலும் சரி, திமுக அணிதான் வெற்றி பெறும். அதிமுக அரசு கவிழும். அரசாங்கம் கவிழ்ந்தபிறகு பொதுத் தேர்தல் வரும். அப்போது திமுக ஆட்சிக்கு வரும்.

திமுக அணியில் இருக்கிறோம். வெற்றிக்காகப் பாடுபடுவோம். அதற்கான ஆதரவுக் கடிதம்தான் சகோதரர் ஸ்டாலின் அவர்கள் அனுப்பியிருக்கிறார். இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு தமது பேட்டியில் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *