டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்கள் முகநூலில் பதிவிட்ட பதிவு
“மக்கள் மருத்துவர்” என்று ஏழை எளிய நடுத்தர மக்களால் மனம் நிறைந்த அன்புடன் அழைக்கப்பட்டு வந்த டாக்டர் ஜெயச்சந்திரன் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே மருத்துவர் கட்டணமாகப் பெற்று உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சை வழங்கிய மனித நேயமும் ஏழை எளியோர்க்கான மருத்துவத்தில் மிகுந்த அக்கறையும் கொண்டிருந்த ஒரு மருத்துவரை வட சென்னை பகுதி மக்கள் இழந்து வருந்தித் தவிக்கிறார்கள் என்பது அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத வண்ணாரப்பேட்டை பகுதியில் 1971ல் குடியேறி அடித்தட்டு மக்களுக்காக ரூபாய் 2ல் தொடங்கி அதிகபட்சமாக 5 ரூபாய் வரை கட்டணம் பெற்று சிகிச்சையளித்து- 41 வருடங்கள் தொய்வின்றி அந்தச் சேவையினை செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கிறார் என்பது சாதாரண சாதனையல்ல.
மருத்துவம் தொடர்புடைய பல்வேறு நூல்களை எழுதியுள்ள அவரது மறைவினை தங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட இழப்பு போல் கருதி வடசென்னைப் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியிருப்பது – மருத்துவ சிகிச்சையில் அவர் கடைப்பிடித்த மாண்புகளுக்கும், மனித நேயத்திற்கும் சாட்சியமாக அமைந்திருக்கிறது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், சோகத்தில் ஆழ்ந்துள்ள வடசென்னை பகுதி மக்களுக்கும் எனது அனுதாபத்தையும், ஆறுதலையும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.