சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் இருந்தே மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, அரும்பாக்கம், முகப்பேர், கே.கே.நகர், திருவொற்றியூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்தக் காற்றழுத்தமானது புதுச்சேரி – சென்னை இடையே கரையைக் கடக்கும் என்பதால் வட மாவட்டங்கள் முழுவதிலும் நல்ல மழை பெய்யும்.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலையில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலையில் திடீரெனக் கன மழை பெய்தது. இதேபோல் ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாகக் கன மழை பெய்தது. தற்போது சென்னையில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மழையால் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டாலும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.