சிவராத்திரி உருவான ஆன்மிக வரலாறும், பலன்களும்

மஹாசிவராத்திரி அன்று சிவப்பிரார்த்தனை செய்தால் சுபிட்சம் உண்டாகும். பொதுவாக நள்ளிரவு நேரத்தில் சிவபெருமானை நினைத்து பூஜை செய்து வழிபடுவது பல நன்மைகளை தரும்.

சிவராத்திரி அன்று எல்லா சிவாலயங்களிலும் உள்ள சிவபெருமானை வழிபடுவது புண்ணியத்தை தரும். சிவராத்திரியின் மகிமையால் உண்டான சப்தவிடங்கத் தலங்கள், பன்னிரு ஜோதிர்லிங்க தலங்கள், பஞ்ச சபைகள், பஞ்சபூத தலங்கள், பஞ்ச ஆரண்ய தலங்களுக்குச் சென்று வழிபடுவது விஷேசம் ஆகும்.  முடிந்த வரையில் சிவனுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்தல் வேண்டும். ஏனெனில் வில்வ இலை சிவனுக்கு உகந்த ஒன்று. மேலும் வில்வ இலையை பிரசாதமாக பெற்று வீட்டில் வைத்தால் சுபிட்சம் உண்டாகும்.

மஹாசிவராத்திரி பற்றிய கதைகள்

சிவராத்திரி பொதுவாக ஐந்து வகைப்படும். நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரியாகும். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தி அன்று மஹாசிவராத்திரியை கொண்டாடுகிறோம்.

மஹாசிவராத்திரியை பற்றி பல்வேறு புராணக் கதைகள் நம்மிடத்தில் கூறப்படுகின்றன.  வில்வ மரத்தின் மேல் இருந்த குரங்கு வில்வ இலைகளை பறித்து தொடர்ந்து இரவு முழுவதும் கீழே போட்டது. அம்மரத்தின் கீழ் சிவலிங்கம் இருந்ததால் அக்குரங்கின் செய்கையை கண்டு மனம் குளிர்ந்த சிவபெருமான் அதனுடைய அடுத்த பிறப்பில் சக்ரவர்த்தியாக வரம் அளித்தார். அவர்தான் முகுந்த சக்ரவர்த்தி. சக்வர்த்தியான பிறகும் கூட அதே சிவபக்தியோடு இருந்தார்.

மற்றொரு கதையான இது அம்பிகை உமாதேவியின் சிவபக்தியைக் கூறுகிறது. பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். எல்லா உயிர்களும் சிவனிடத்தே ஒடுங்கின. உலகமே இல்லாமல் போனது.

இந்நிலையில் அம்பிகை உமாதேவி அனைத்து உயிர்களும் தோன்றி அண்டம் உருவாகும் பொருட்டு பரமேஸ்வரனை நினைத்து இரவு முழுவதும் பூஜை செய்தால், மனம் குளிர்ந்த இறைவன் தன்னிடத்தே ஒடுங்கிய அனைத்து உயிர்களையும் உண்டாகச் செய்தார்.

மேலும் அம்பிகை உமாதேவி ஸ்வாமி நான் தங்களை மனதில் நினைத்து போற்றிய காலம், தங்கள் நாமத்தாலே “சிவராத்திரி “ என்று அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டினாள். சிவபெருமானும் அவ்வாரே என்று அருள் புரிந்தார்.அம்பிகையை தொடர்ந்து பல்வேறு முனிவர்களும், சித்தர்களும் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேற பெற்றார்கள் என புராணங்கள் பல கூறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *