பணமோசடி குற்றச்சாட்டில், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் கார்த்தி சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
’தொகுதி மக்கள் மீது கவனம் செலுத்துங்கள்’ கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் அறிவுரை!
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வெளிநாடு செல்ல வைப்பு நிதியாக உச்சநீதிமன்றத்தில் செலுத்திய ரூ.10 கோடியை திருப்பிதரக் கோரி கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தொகுதி மக்களை சென்று கவனிக்குமாறு’ அறிவுறுத்தி கார்த்தி சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தது.
பல்வேறு குற்றவழக்குகளை எதிர்கொள்ளும் கார்த்தி சிதம்பரம், நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். காங்கிரஸின் பாரம்பரிய கோட்டையாக திகழ்ந்து வரும் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முன்னதாக, ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அனுமதி அளிக்கும்படி கூறியிருந்தார்.
கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம், நீதிமன்றத்தில் ரூ.10 கோடியை வைப்பு நிதியாக செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளார். அப்போது, 2வது முறையாக 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு வெளிநாடு செல்லலாம் என நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், தான் முன்பு செலுத்திய ரூ.10 கோடியை திருப்பி தரக் கோரி கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ளளார். மேலும் அந்த மனுவில், உச்சநீதிமன்றத்திற்கு தான் செலுத்திய ரூ.10 கோடி வைப்பு நிதியை தான் வங்கியில் இருந்து கடனாக பெற்றதாகவும் அதற்கு வட்டி கட்டி வருவதாகவும் அதனால், அந்த வைப்பு நிதியை திருப்பி தரவேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, கார்த்தி சிதம்பரம் மனுவை விசாரித்த நீதிபதிகள், நாங்கள் ரூ.10 கோடி வைப்பு நிதியை திரும்ப தருகிறோம், ஆனால் உங்களுக்கு இரண்டாவது உத்தரவு பிறப்பிக்கிறோம், அது ரூ.20 கோடி வைப்பு நிதி வைக்க வேண்டும் என்பதாகும். அதில் உங்களுக்கு சம்மதமா? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் ‘தொகுதி மக்களை சென்று கவனிக்குமாறு’ கார்த்தி சிதம்பரத்திற்கு அறிவுரையும் வழங்கியுள்ளது.