கடந்த செவ்வாய்க்கிழமை சாம்சங் இந்தியா நிறுவனம் உலகின் முதல் QLED 8K டிவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி துறையில் ஒரு புதிய சாதனையாக பார்க்கப்படும் இந்த ‘சாம்சங் QLED 8K டிவி’யை ஆடம்பர வீடுகளை மையப்படுத்தியே சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 8K தரம், 8K செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை, குவாண்டம் ப்ராசஸர் 8K, குவாண்டம் HDR என பல அம்சங்களை கொண்டு ஒரு 8K அனுபவத்தை உங்கள் கண்களுக்கு தரவுள்ளது, இந்த ‘சாம்சங் QLED 8K டிவி’. மொத்தம் நான்கு திரை அளவுகளை கொண்டு வெளியாகவுள்ள இந்த டிவி: 98-இன்ச், 82-இன்ச், 75-இன்ச் மற்றும் 65-இன்ச் ஆகிய அளவுகளை கொண்டுள்ளது. இந்த டிவி, 4K UHD டிவிக்களைவிட 4 மடங்கு அதிக தரத்திலும், FHD திரைகளை விட 16 மடங்கு அதிகமான தரத்திலும் காணோளிகளை வெளிப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த ‘சாம்சங் QLED 8K டிவி’க்களில், 75-இன்ச் அளவிலான திரை கொண்ட டிவியின் விலை 10,99,900 ரூபாய். 82-இன்ச் டிவியின் விலை 16,99,900 ரூபாய் மற்றும் 98-இன்ச் டிவியின் விலை 59,99,900 ரூபாய். தற்போது, 98-இன்ச் திரை டிவி மட்டுமே முன்பதிவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 65-இன்ச் டிவியின் விலை பின்னர் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது சாம்சங் நிறுவனம். இந்த 65-இன்ச் டிவி ஜூலை மாதத்தில் தான் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய டிவியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது குவாண்டம் ப்ராசஸர் 8K-வில் செயல்படும் 8K செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை. இது பார்வையாளர்கள் HDMI, USB மற்றும் செட்-டாப் பாக்ஸ் ஆகியவற்றில் பார்க்கும் அனைத்து வீடியோக்களையும் அந்த வீடியோ எந்த தரத்தில் உள்ளது என்பதை பொருட்படுத்தாமல் 8K தரத்தில் காண்பிக்க உதவும். அதுதான் இந்த டிவி காண்பிக்க இருக்கும் மாயாஜாலம். நம்மிடம் தற்போது 8K தரத்திலான வீடியோக்கள் அவ்வளவு அதிகமாக இல்லை, ஆனால் இந்த டிவி அனைத்து வீடியோக்களையும் தனது உண்மையான தரத்திலிருந்து 8K தரத்தில் மாற்றிக்கொள்ளும்.