இந்திய கிரிக்கெட் அணிக்காக 19 ஆண்டுகளாக 400 சர்வதேச போட்டிகளில் விளையாடிய யுவராஜ் சிங், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2000 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், யுவராஜ், தனது கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னர் புற்று நோயால் அவதிப்பட்ட யுவராஜ், அதிலிருந்து மீண்டு வந்து சர்வதேச கிரிக்கெட்டில் கலக்கினார். இதைத் தவிர பல ஐபிஎல் அணிகளுக்காகவும் களமிறங்கி ரன்களை குவித்துள்ளார் யுவராஜ்.
2003 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார் யுவராஜ். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை அணியில் அவர் இடம் பிடித்தார்.
40 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள யுவராஜ், 33.92 சராசரியில் 1900 ரன்கள் குவித்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் மற்றும் 11 அரைசதங்களை அடித்துள்ளார். அவர் 2007-ல் பெங்களூருவில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 169 ரன்கள் குவித்தார்.
அதேபோல 304 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள யுவராஜ், 36.55 சராசரியில் 8701 ரன்கள் குவித்தார். அதில் அவர் 14 சதங்களையும் 42 அரைசதங்களையும் அடித்தார். 2017-ல் கட்டக்கில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அவர் குவித்த 150 ரன்களே, ஒருநாளில் யுவராஜ் அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
2007 டி20 உலகக் கோப்பையின்போது, ஸ்டுவர்ட் ப்ராடின் ஒரே ஓவரில் யுவராஜ், 6 சிக்ஸர்கள் அடித்தது வரலாற்றில் இடம் பிடித்தது.
டி20-ஐப் பொறுத்தவரை யுவராஜ் ஒரு சூப்பர்ஸ்டார். 58 போட்டிகளில் அவர் 136.38 ஸ்டிரைக் ரேட்டில் 1,177 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். 2013-ல் ராஜ்கோட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் 77 ரன்கள் அடித்ததே, டி20-யில் அவரது அதிக ஸ்கோர்.
தனது இடக்கை சுழற்பந்து வீச்சுக்கும் பெயர் பெற்றவர் யுவராஜ். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனால் யுவராஜ், “பை-சக்கர்” என்று அழைக்கப்பட்டார். ஒருநாள் போட்டிகளில் யுவராஜ், மொத்தமாக 111 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரது பெஸ்ட் 5/31 ஆகும்.
ஓய்வு குறித்து யுவராஜ், “22 அடிகளில் எனது 25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை இருந்தது. 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினேன். இப்போது இவை அனைத்துக்கும் விடைகொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன். கிரிக்கெட்தான் எனக்கு எப்படி போராடுவது, எப்படி வீழ்வது, எப்படி அதைத் துடைத்தெறிந்து எழுவது, எப்படி முன்னோக்கிச் செல்வது என எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது” என்று நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.