சரிவில் இருந்து மீண்டு வென்ற இந்தியா

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 5 வது ஒரு நாள் போட்டியானது நேற்று வெல்லிங்டனில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ரோஹித் ஷர்மா, தவான், கில், தோனி போன்ற முன்னணி வீரர்கள் நடையை கட்டினர். ஒரு கட்டத்தில் 18 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து தவித்து கொண்டு இருந்த இந்திய அணியை அம்பத்தி ராயிடு மற்றும் விஜய் ஷங்கர் சரிவில் இருந்து மீட்டனர்.

64 பந்துகளில் 45 ரன்கள் அடித்த விஜய் சங்கர் ரன் அவுட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் களம் இறங்கிய கெதர் ஜாதவ் தன் பங்குக்கு 45 பந்துகளில் 34 ரன்கள் அடித்து ஹென்ரி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உடன் 113 பந்துகளில் 90 ரன்கள் அடித்து ஹென்ரி பந்து வீச்சில் முண்ரோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

அதன் பின் அதிரடியாக சரவெடி வெடித்த சர்ச்சை நாயகன் ஹர்திக் பாண்டியா 5 சிக்ஸர்கள்,2 பவுண்டரிகள் உடன் 22 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து நிஷம் பந்து வீச்சில் பவுல்ட்யிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதில் ஹேட்டிரிக் சிக்ஸர்களும் அடங்கும். நியூசிலாந்து அணி தரப்பில் ஹென்ரி நான்கு விக்கெட்களும் , பவுல்ட் மூன்று விக்கெட்களும கைப்பற்றினர்.

அதன் பின் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 44.1 ஓவர்களில் 217 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக நீஷம் 44 ரன்களும், விக்கெட் கீப்பர் லாதம் 37 ரன்களும், கேப்டன் வில்லியம்சன் 39 ரன்களும் எடுத்தனர்.இந்திய அணியில் சாகள் 3 விக்கெட்களும் சமி, ஹர்திக் பாண்டியா தலா இரண்டு விக்கெட்களும் கைபற்றி அசத்தினர்.

நீண்ட நாட்களுக்கு பின் நடுகள வீரர்களில் சிறப்பான பேட்டிங் ஆல் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடதக்கது. ஆட்ட நாயகன் விருதை அம்பத்தி ராயுடு பெற்றார்.5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 4-1 என இந்திய அணி வெற்றி வாகை சூடி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *