இன்று வெலிங்டனில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து வீரர்கள் அடித்து ஆட துவங்கினர்.
துவக்க வீரர் கோலின் முன்ரோ 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்து கருநல் பாண்டியா பந்து வீச்சில் விஜய் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க வீரர் டிம் செய்ஃபர்ட் 7 பவுண்டரிகள்,6 சிக்ஸர்களுடன் 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்து கலீல் அஹமத் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 22 பந்துகளில் 34 ரன்கள் அடித்து சாகள் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். ரோஸ் டெய்லர் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 219 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து பேட்ஸ்மென்கள் 20 ஓவர்களில் 14 பவுண்டரிகளும்,14 சிக்ஸர்களும் அடித்து மலைக்க வைத்தனர். இந்திய அணி தரப்பில் 4 ஓவர்கள் பந்து வீசிய ஹர்திக் பாண்டியா 51 ரன்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார். இந்திய பந்து வீச்சில் யாருடைய பந்து வீச்சும் குறிப்பிடதகும் வகையில் இல்லை.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது. நியூசிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. டி20 போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியை இந்திய அணி சந்தித்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தோனி 39 ரன்களும், தவான் 29 ரன்களும், தமிழக வீரர் விஜய் ஷங்கர் 27 ரன்களும், கருநல் பாண்டியா 20 ரன்களும் எடுத்தனர். மற்ற இந்திய வீரர்கள் யாரும் இரட்டை இலக்கை அடையவில்லை. சிறப்பாக பந்து வீசிய நியூசிலாந்து வீரர் சவுத்தி 3 விக்கெட்களும் பெர்குசன், சண்ட்னர், சோதி தலா இரண்டு விக்கெட்களும் கைப்பற்றினர்.84 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் செய்பெர்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.