ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கே.பன்னீர் செல்வம், சரண்யா தம்பதியரின் மகன் ப.இனியன். தனியார் பள்ளி மாணவர். காமன்வெல்த் சதுரங்கப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் சதுரங்க கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைப் பெற வேண்டுமானால் மூன்று முறை கிராண்ட் மாஸ்டர் நார்ம் தகுதியை பெற வேண்டும். கடந்த ஆண்டு ஜூலை மாதமே இந்த மூன்று நார்ம்களையும் இனியன் நிறைவு செய்தார். எனினும் அவர், 2478 புள்ளிகளே பெற்றிருந்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல 2500 புள்ளிகளை எட்ட வேண்டும் என்ற நிலை இருந்தது.இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நடந்த போட்டியில் இனியன் 17 புள்ளிகள் பெற்றார்.
கடந்த 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச சதுரங்கப் போட்டியில் 18 புள்ளிகளை பெற்ற இனியன் ஒட்டுமொத்தமாக 2513 புள்ளிகளை கடந்து இந்தியாவின் 61-வது கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப் பட்டார்.