கவிதை தொகுப்பு…!
வாசகர் திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களின்
கவிதை தொகுப்பு.
1 ] அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
2] துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
3] தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!
4] வண்டி இழுக்கும்நல்ல குதிரை,-நெல்லு
வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை,ஆடு,-இவை
ஆதரிக்க வேணுமடி பாப்பா!
5] பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
6] துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்
அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!
7] தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா!-நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!
8] சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி,கல்வி-அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்.
உயிர்க ளிடத்தில்அன்பு வேணும்;-தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேணும்;
வயிர முடையநெஞ்சு வேணும்;-இது
வாழும் முறைமையடி பாப்பா!
சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே!-அதைத்
தொழுது படித்திடடி பாப்பா!
9] அறிவை வளர்த்திட வேண்டும் – மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்.
சிறியரை மேம்படச் செய்தால் – பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்.
10] வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா!
11] காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா
12] உண்ணும் உணவுக்கும் – இடுப்பில்
உடுக்கும் ஆடைக்கும்
மண்ணில் அந்நியரை நம்பி
வாழ்தல் வாழ்வாமோ?
உண்ணும் உணவுக் கேங்காமல்
உடுக்கும் ஆடைக் கலையாமல்
பண்ணும் தொழில்கள் பலகாண்போம்
பஞ்சப் பேயைத் துரத்திடுவோம்
அண்ணல் காந்திவழி பற்றி
அகிலம் புகழ வாழ்ந்திடுவோம்.
13] பாப சரக்குகளைப் பணத்தாலே மூடிவைத்து
பாசாங்கு வேலைசெய்த பகல் வேஷக்காரர்களும்
ஆபத்தில் சிக்கி அழிந்தார்களானாலும்
அடுத்தடுத்து வந்தவரும் அவர்களுக்குத் தம்பியடா
அவருவந்தார் இவருவந்தார் ஆடினார் – முடிவில்
எவருக்குமே தெரியாம ஓடினார் – மனதில்
இருந்ததெல்லாம் மறந்து கண்ணை மூடினார்
14] பழந்துணி அணிந்தாலும்
பாதை தவறாத
பண்பு உள்ளம்
இருந்தநிலை மறந்து
இழுக்கான குற்றம்தன்னைப்
புரிந்திட லாமென்று
துணியுதடா – நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா
15] எத்தனையோ உண்மைகளை
எழுதிஎழுதி வச்சாங்க
எல்லாந்தான் படிச்சீங்க
என்னபண்ணிக் கிழிச்சீங்க?
16] காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!
17] தக்க துணை யாருமில்லை
ஓய்வில்லாக் கவலையாலே
ஒரு வழியும் தோன்றவில்லை
18] உதிரும் சிறகுகள்
மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம்
காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து –
ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளரம் வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.
19] நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!
20] மனிதா கடவுளர் வாகனம் கவனித்தாயா?
மனிதா
கடவுளர் வாகனம்
கவனித்தாயா?
ஒரு கடவுள் – காளை கொண்டான்
ஒரு கடவுள் – மயில் கொண்டான்
ஒரு கடவுள் – எலி கொண்டான்
ஒரு கடவுள் – கருடன் கொண்டான்
எந்தக் கடவுளையும்
விலங்கு சுமந்ததன்றி
மனிதன் சுமந்ததில்லை
மனிதனைச் சுமக்கச் சொன்னால்
கடத்திவிடுவானென்று
கடவுளுக்குத் தெரியாதா?
21] உடல் எழுத்து
அதிகாலை எழு.
ஆகாயம் தொழு.
இருதயம் துடிக்க விடு.
ஈரழுந்த பல் தேய்.
உடல் வேர்வை கழி.
ஊளைச்சதை ஒழி.
எருதுபோல் உழை.
ஏழைபோல் உண்.
ஐம்புலன் பேணு.
ஒழித்துவிடு புகை & மதுவை.
ஓட்டம் போல் நட.
ஒளதடம் பசி.
அஃதாற்றின் எஃகாவாய்.
Arumai