கர்நாடகா இடைத்தேர்தலில், 15 தொகுதிகளில் பாஜ 12 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் கிடைத்தன. பாஜக அதிருப்தி சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார். எதிர்பார்த்ததை விட கூடுதலாக 4 தொகுதிகள் பாஜக வசமாகி இருப்பதால் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு இருந்து வந்த ஆபத்து நீங்கி விட்டது. கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில், அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்த 17 எம்எல்ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 17 பேரில், 15 பேர் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என உத்தரவிட்டது. இந்நிலையில், காலியாக இருந்த 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
