கபடி ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட விளையாட்டு. இதனைச் சடுகுடு அல்லது பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும்.எதிரணிக்கு செல்லும் வீரர் மாட்டைப் போல் கருதப்படுவார். அவ்வீரரை தொடவிடாமல் மடக்கி பிடிப்பது, மாட்டை முட்ட விடாமல் அடக்குவதற்கு சமமாகும்.
சல்லிக்கட்டிற்கு (ஏறு தழுவுதல்) தயாராகும் முன் தமிழர்கள் செய்யும் பயிற்சியே “கபடி” என்ற பெயரால் பல காலமாக விளையாடப்பட்டு வருகிறது. கபடி என்ற பெயரும் தமிழ்ப்பெயராக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது கை+பிடி = கபடி. இது தெற்கு ஆசியா நாடுகளில் பரவலாக விளையாடப்படுகிறது.
கபடி விளையாடும் முறை:
கபடி இரு அணிகளுக்கு இடையே நிகழும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி. ஒவ்வொரு அணியிலும் ஏழு பேர் இருப்பர். மொத்த விளையாட்டு நேரம் 40 மணித்துளிகள் (நிமிடங்கள்).
கபடி விளையாட வெறும் நீள்சதுரமான (ஆடுகளம்) இடம் இருந்தால் போதும். இந்த ஆடுகளத்தை ஒரு நடுக்கோட்டால் இரண்டாகப் பிரித்து ஒருபக்கத்துக்கு ஒரு அணியாக இரு அணியினரும் இருப்பர்.
ஆட்டக்காரர்கள் எப்பொழுதும் புற எல்லைக்கோடுகளைத் தாண்டிச் செல்லலாகாது. அவ்வாறு சென்றால் அவர் ஆட்டம் இழப்பார்.இவ்விளையாட்டுக்கு ஒரு நடுவரும் தேவை.
ஒரு அணியிலிருந்து யாரேனும் ஒருவர் புறப்பட்டு நடுக்கோட்டைத் தொட்டுவிட்டு ஒரே மூச்சில் “கபடிக் கபடி” (அல்லது “சடுகுடு”) என்று விடாமல் கூறிக் கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று எதிர் அணியினரைக் கையாலோ, காலாலோ தொட்டுவிட்டு எதிர் அணியினரிடம் பிடிபடாமல் நடுக்கோட்டைத் தாண்டித் தம் அணியிடம் திரும்பிவரும் ஒரு வகை விளையாட்டு. தொடுபட்டவர் ஆட்டம் இழப்பார். ஆனால் எதிரணியினர் சூழ்ந்து பிடிக்க வருவர். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்” என்று சொல்லிக்கொண்டே எதிராளியைத் தொட்டுவிட்டு அகப்படாமல் திரும்பிவர வேண்டும், அகப்பட்டால் சென்றவர் ஆட்டமிழப்பார். மூச்சு விடாமல் ‘கபடிக் கபடிக்’ என்று சொல்வதற்குப் பாடுதல் என்று பெயர்.
தம் அணிக்குத் திரும்பும் முன் பாடுவர் பாட்டை நிறுத்தினாலும் ஆட்டம் இழப்பர். ஆண்களுக்கான சடுகுடுவும், பெண்களுக்கான சடுகுடுவும் சற்று வேறுபடும்.
ஆடுகளம்:
ஆடுகளம், மேடு பள்ளம் இல்லாத ஒரு சமதளமாக இருக்க வேண்டும். ஆட்கள் கீழே விழுவதும், இழுக்கப்படுவதும் நிகழ்வதால், தரை மண் அல்லது மரத்தூள், மணல், பஞ்சு மெத்தை பரப்பியதாக இருக்க வேண்டும். கட்டாந்தரையாக (காங்க்கிரீட்டாக) இருப்பது நல்லதல்ல.
ஆண்கள் ஆடும் களம் 12.50 மீ x 10 மீ பரப்பு கொண்டதாகும். பெண்கள் ஆடும் களம் 11 மீ x 8 மீ பரப்பு ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும், கோடுகளும் மற்றும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குல (5 செ.மீ) அளவினதாக இருக்க வேண்டும்.