கனிமொழியா? தமிழிசையா?

நாடாளுமன்ற தேர்தல் ஆனது அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் பெயரை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் என இரு பெரும் புள்ளிகள் களத்தில் இறங்கி உள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது. இவர்கள் இருவருக்கும் இடையே நேரடியான போட்டி இந்த தொகுதியில் காணப்படுகிறது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியானது விளாத்திகுளம்,திருச்செந்தூர்,தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி உள்ளிட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 69.13 சதவீத வாக்குபதிவும், 2014  ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 69.92 சதவீத வாக்குபதிவும் நடைபெற்றது.

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் ஜெயதுரை 76649 வாக்குகள் வித்தியாத்தில்  வெற்றி பெற்று மக்களவை தொகுதியின் உறுப்பினர் ஆனார். இந்த தேர்தலில் ஜெயதுரை 3,11,017 வாக்குகளும், இவரை எதிர்த்து நின்ற அதிமுகவை சிந்தியாபாண்டியன் 2,34,368 வாக்குகளும் பெற்றனர்.

2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஜெயசிங் ஜெயராஜ் 3,66,052 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் ஜெகன் 2,42,050 வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மதிமுகவின் சார்பில் போட்டியிட்ட ஜோயல் 1,82,191 வாக்குகள் பெற்றார்.


இந்த முறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். இவர் எத்திராஜ் கல்லூரியில் வணிகவியல் முதுகலை பட்டம் பெற்று உள்ளார்.2007 ஆம் ஆண்டில் இந்திய மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் 2013 ஆம் ஆண்டு வரை பதவி வகித்து உள்ளார். கனிமொழி அவர்கள் கடந்த ஒரு வருட காலமாக தூத்துக்குடியில் கடுமையான கள பணி ஆற்றி வருகிறார்.கனிமொழியை எதிர்த்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் களத்தில் இறங்கி உள்ளார். தமிழிசையும் அவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள் ஆவார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் மற்றும் அதன் விளைவாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஆகியவை இத்தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. அதே நேரத்தில் இந்த வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற வைகோ அவர்கள் திமுகவின் பக்கம் நிற்பது அவர்களின் பலத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது.

சென்ற முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் மதிமுகவில் போட்டியிட்டு 1,82,191 வாக்குகள் பெற்ற ஜோயல் திமுகவில் இணைந்து செயலாற்றி வருகிறார். கடந்த தேர்தலில் ஏழு சதவீத வாக்குகளை பெற்ற காங்கிரஸ் கட்சியும் இந்த முறை திமுக கூட்டணியில் இருப்பது கூடுதல் பலமாகும். திமுகவில் உள்ள அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் தூத்துக்குடி பகுதிகளில் மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்கின்றனர்.

இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வெற்றி  கிட்டத்தட்ட உறுதியான ஒன்றுதான். தமிழிசை சவுந்தரராஜனின் வருகை கனிமொழிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்த போவது இல்லை. வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த போகிறது என்பதே தற்போதைய நிலவரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *