கடுமையான போராட்டத்துக்கு பின் டிரா செய்தது ஆஸ்திரேலியா

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 7 ம் தேதி துபாயில் தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 482 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் ஹபீஸ், ஹரிஸ் சோஹேல் சதம் அடித்தனர். ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தன் அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய பிலால் ஆசிப் 6 விக்கெட்களை கைப்பற்றினார்.280 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுக்கு பாலோ ஆன் தராமல் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் தன் இரண்டாம் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடுமையான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 4 ம் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. கிரிக்கெட் ஆர்வலர்கள் மீதமுள்ள 7 விக்கெட்களை கைப்பற்றி பாகிஸ்தான் எளிதில் வென்று விடும் என்றே நினைத்தனர்.

இந்நிலையில் 5 ம் நாள் ஆட்டமானது நேற்று நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின்  கவாஜா மற்றும் ஹெட் பாகிஸ்தானின் சிறப்பான பந்து வீச்சை எதிர்கொண்டு பொறுமையாக ரன்கள் சேகரித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரைசதம் அடித்தார். பொறுமையாக விளையாடிய இருவரும் உணவு இடைவெளி வரை விக்கெட் விழாமல் பார்த்து கொண்டனர்.

132 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி கொண்டு இருந்த இந்த ஜோடியை ஹபீஸ் பிரித்தார். ஹெட் 72 ரன்களில் ஹபீஸ் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். லபுஸ்கேஜின் 13 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பைன் களம் இறங்கினார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா பாகிஸ்தானுக்கு எதிராக தன் முதல் சதத்தை பதிவு செய்தார். பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் மேலும் விக்கெட்கள் விழாமல் தேனீர் இடைவெளி வரை பார்த்து கொண்டனர்.

தேனீர் இடைவெளிக்கு பின் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அஹமது யாசிர் ஷா, பிலால் ஆசிப் என இருமுனை சுழல் தாக்குதலை தொடுத்தார்.கடுமையான நெருக்கடிலும் நேர்த்தியாக விளையாடிய கவாஜா  141 ரன்களில் யாசிர் ஷா பந்து வீச்சில் அவுட் ஆனார். மீண்டும் யாசிர் ஷா தான் வீசிய அடுத்த ஓவரிலேயே ஸ்டார்க்ஐ 1 ரன்னிலும் சிடில்ஐ டக் அவுட்லிலும் வெளியேற்றினார்.

இதனால் நெருக்கடிக்கு தள்ளப்பட்ட ஆஸ்திரேலியா 333 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. மீதமுள்ள 13 ஓவர்களில் 2 விக்கெட்களை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் 8 பீல்டர்களை பேட்ஸ்மேன் அருகில் கொண்டு வந்து நிறுத்தி சுழல் தாக்குதலை தீவிர படுத்தியது. அதனை சிறப்பாக எதிர் கொண்ட ஆஸ்திரேலிய கேப்டன் பைன் அரைசதம் அடித்தார். அவருக்கு பக்க பலமாக நின்ற லயன் 34 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தார். இறுதி வரை களத்தில் நின்ற பைன் 61 ரன்கள் எடுத்தார். கடைசியில் பரபரப்பான டெஸ்ட் போட்டி ஆனது டிரா ஆனது.

ஆசிய மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த  வெளிநாடடு் வீரர் என்ற சிறப்பை பெற்ற கவாஜா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் எடுத்ததும் குறிப்பிடதக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *