கடலை மலடாக்கும் பா.ஜ.க அரசின் திட்டம்!-வைகோ கண்டனம்

தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய கடலோர மண்டலத்தில் செயல்படுத்த உள்ள சாகர் மாலா திட்டத்திற்கு வைகோ அவர்கள் முகநூலில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு வரைந்துள்ள, தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய கடலோர மண்டல மேலாண்மைத் திட்டத்தின் வரைவு, சுற்றுச் சூழல் பாதுகாப்பைவிட, வணிக நலன்களுக்காகப் பயன்படுத்த முயலும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வதையே முதன்மை இலக்காகக் கொண்டு இருக்கின்றது. அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில், உள்நாட்டு நீர் வழி சரக்குப் போக்குவரத்து என்ற பெயரால் மோடி அரசு செயல்படுத்த முனைந்துள்ள சாகர் மாலா திட்டம், பேரழிவை உருவாக்கி, தங்கள் வாழ்வாதாரங்களைச் சூறையாடும் என மீனவர்கள் அதனை எதிர்த்து அறவழியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், மீனவர்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக கடல் உயிரின வளர்ப்புக்கான வரைவு தேசியக் கொள்கை, 2018ஐ பா.ஜ.க. அரசு கொண்டுவர முனைந்துள்ளது.

கடல் உணவின் தேவை பெருகி வருகின்றது. கடலில் மீன்பிடித்தல் மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பினைக் கொண்டு அதனை நிறைவு செய்ய முடியாது என்பதால், பண்ணைகளில் கடல் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கான தொலைநோக்குத் திட்டம் என்று, தேசிய கடல் உயிரின வளர்ப்பிற்கான வரைவுக் கொள்கை (சூயவiடியேட ஞடிடiஉல டிக ஆநசiஉரடவரசந -2018) வரையப்பட்டுள்ளது. கடலில் கூண்டு வைத்து மீன் வளர்ப்பது மற்றும் கடற்பாசிகளையும், மீன்களையும் வணிகஅடிப்படையில் கடலில் வளர்ப்பது என்பது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இந்தத் திட்டத்தின்படி, கடற்கரையில் இருந்து 12 கடல் மைல் வரை மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட நிலத்தை ‘மீன் வளர்ப்பு’, ‘கடல் உணவு உற்பத்தி’ வளர்ச்சி எனும் பெயரால் மத்திய அரசு கைப்பற்றத் துடிக்கின்றது. அவ்வாறு கைப்பற்றிடும் கடலோரப் பகுதிகளையும், தீவுகளையும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கவும் பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே தொழிற்சாலைக் கழிவுகளும், நகரக் கழிவுகளும், அணு உலை மற்றும் இதர கழிவுகளும் கடலுக்குள் கொட்டப்படுவதால், கடல் மாசுபட்டு, மீன்வளம் அழிந்து வரும் சூழலில், இரசாயனத்தைப் பயன்படுத்தி அதிக அளவில் கூண்டுகளில் மீன் வளர்க்கும் முயற்சி கடலை மலடாக்கி விடும்.

கடலில் எத்தனை உயிர் இனங்கள், தாவரங்கள் இருக்க வேண்டும் என்பதை இயற்கையே தீர்மானிக்கின்றது. இவைகளில் மாற்றம் ஏற்படும் போது இயற்கையே அதைச் சமன்படுத்திக்கொள்ளும் வகையில் கடல்வாழ் உயிர் இனங்கள், கடல் தாவரங்கள் தகவு அமைத்துக் கொள்கின்றன.

இந்நிலையில், கூண்டுகளில் மீன் வளர்க்கும் திட்டத்தால் இரசாயனப் பொருட்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் சூழல் உருவானால் கடல் நிறமிகள் அழியும். இதனால் சூரிய ஒளி நேரடியாகக் கடலுக்குள் ஊடுருவிச் செல்லும்; கடலின் வெப்பநிலை உயர்ந்துவிடும்; பருவ கால மாற்றத்தால் (ஊடiஅயவந உhயபேந) கடல்நீர் மட்டம் உயரும்; வெப்பநிலை அதிகரிக்கும்; பவளப் பாறைகள், கடல் தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் அழிந்து சங்கிலித் தொடர் உயிர்ச் சூழல் முற்றிலும் அறுபட்டுப் போகும் என்று உலக நாடுகள் கவலை கொண்டுள்ள நிலையில், இந்திய அரசு கடலின் சுற்றுச் சூழலை சீர்கேடு அடையச் செய்யும் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்து வருவது கண்டனத்திற்கு உரியதாகும்.

எனவே, கடலின் இயற்கைத் தன்மையை அழிக்கின்ற, இந்தியாவின் 7500 கி.மீ. நீள கடலோர பகுதிகளை தனியார் நிறுவங்களுக்கு தாரை வார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் கடல் உயிரின வளர்ப்புக்கான வரைவு தேசியக் கொள்கை 2018 ஐ மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *