அரசியல்கட்டுரைகள்தமிழ்நாடுபுதிய செய்திகள்

‘என்னுடைய நாட்டின் விடுதலைக்காகப் போராடினேன். அது என் கடமை. அதற்காக எனக்கு ஏன் பென்ஷன்?’

( #நல்லகண்ணு)

என்னுடைய நாட்டின் விடுதலைக்காகப் போராடினேன். அது என் கடமை. அதற்காக எனக்கு ஏன் பென்ஷன்?’

                                      ( #நல்லகண்ணு)

நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடி, பல ஆண்டுகள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தவர். உழைப்பாளி மக்களின் நலனுக்காக வீரஞ்செரிந்த பல போராட்டங்களை முன்னெடுத்தவர். அதற்காகப் பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர். ‘என்னுடைய நாட்டின் விடுதலைக்காகப் போராடினேன். அது என் கடமை. அதற்காக எனக்கு ஏன் பென்ஷன்?’ என்று சொல்லி தியாகிகள் பென்ஷனை வாங்க மறுத்தவர்.

அவருக்குத் தமிழக அரசு அம்பேத்கர் விருது வழங்கி ஒரு லட்சம் ரூபாய் பரிசுப்பணம் கொடுத்தது. அதை அப்படியே அவர் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கொடுத்துவிட்டார். இதுபோல இவருக்கு வழங்கப்பட்ட ஏராளமான விருதுகளையும் பணமுடிப்புகளையும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் விவசாயிகள் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார். இவருக்கு 80-வது பிறந்த நாளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிதி திரட்டப்பட்டு ஒரு கோடி ரூபாயையும் ஒரு காரையும் கட்சி இவருக்கு வழங்கியது. அவற்றை அப்படியே கட்சிக்குத் திருப்பிக்கொடுத்துவிட்டவர் நல்லகண்ணு. இன்றைக்கும் இவருக்குக் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடு இல்லை

இதற்கு முன்பு சென்னைப் பட்டினப்பாக்கம் பகுதியில் அரசுக் குடியிருப்பில் நல்லகண்ணுவுக்கு அரசால் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அதை வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு வந்தார். பிறகு, தி.நகர் சி..டி காலனியில் அரசுக் குடியிருப்பில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டது. அதை வாடகையின்றி வசித்துக்கொள்ளுமாறு அரசு கூறியபோது, ‘இலவசமாக வேண்டாம். எனக்கு வாடகையை நிர்ணயம் செய்துகொடுங்கள் என்று கேட்டு கடைசிவரை வாடகை செலுத்திவந்தார்.

நாட்டின் சுதந்திரத்துக்காக மட்டும் இவர் போராடவில்லை. இன்றைக்கு அவருக்கு 94 வயதாகிறது. இன்றைக்கும்கூட ஏழை எளிய மக்களுக்காக வீதியில் நின்று போராடிவருபவர் நல்லகண்ணு.

தாமிரபரணி நதியைப் பாதுகாத்த தலைமகன் என்று நல்லகண்ணுவுக்கு ஒரு பட்டம்கூட கொடுக்கலாம். தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலக்கிற ஒரு நதி உள்ளதென்றால், அது தாமிரபரணி நதி மட்டுமே. அப்படியொரு பெருமைமிக்க தாமிரபரணி நதியை மணல் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க, நீதிமன்றத்தின் படியேறி தானே வாதிட்டு வெற்றியும் கண்டவர் நல்லகண்ணு.

இப்படிப்பட்ட ஒரு மதிப்புமிக்க ஒரு தலைவரை, அவர் வசித்துவந்த வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்கிறது தமிழக அரசு. காமராஜர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவரும் எளிமைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டியவருமான கக்கனின் வாரிசுகளையும் அங்கிருந்து வெளியேற்றியுள்ளது அரசு. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் கக்கன் வாரிசுகளுக்கு வாடகையில்லாமல் குடியிருக்க ஒதுக்கப்பட்ட வீடு அது.

அவர் கவர்ச்சி மிக்க நடிகரும் அல்ல. அவர் பெரும் வர்த்தக வியாபாரியும் அல்ல. அவர்க்கு தெரிந்தது அனைத்தும் நேர்மை.நேர்மை.நேர்மை.

இந்தக் கட்டடங்கள் கட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேலாகின்றன உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது…’ என்று அரசு சொல்லும் காரணங்களை யாரும் மறுக்கவில்லை. ஆனால், நல்லகண்ணுவுக்கும் கக்கனின் வாரிசுகளுக்கும் அங்குள்ள குடியிருப்புகளில் வசித்துவந்த பிற மக்களுக்கும் மாற்று ஏற்பாடு செய்துவிட்டு, அவர்களை அங்கிருந்து காலிசெய்திருந்தால், ‘மக்கள் நல அரசு என்று எடப்பாடி அரசைப் பாராட்டியிருக்கலாம்.

அரசியல் நேர்மையும் பொதுவாழ்வில் எளிமையும் அற்றுப்போய் வருகிற இன்றைய காலச்சூழலில், தன் வாழ்க்கையை எதிர்காலத் தலைமுறைக்கான ஒரு பாடமாக வைத்திருக்கிற நல்லகண்ணுவை கௌரவத்துடன் நடத்த தவறியிருக்கிறது தமிழக அரசு.

வீட்டைக் காலிசெய்யுங்கள் என்று அரசு நோட்டீஸ் அனுப்பியதும் சத்தமில்லாமல் வீட்டை காலிசெய்துவிட்டு வேறொரு வாடகை வீட்டில் குடியேறிய நல்லகண்ணு, ‘எல்லோரையும்போல நானும் ஒரு சாதாரண மனிதன்தான். எனக்கு வீடு இல்லையென்றாலும் பரவாயில்லை. கக்கன் வாரிசுகள் குடியிருக்க வீடு கொடுக்க வேண்டும் என்று இந்த நிலையிலும் மற்றவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

 

அதனால்தான் அவர் நல்லகண்ணு.!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker