எங்கே ஆக்சிஜன் ?

காற்றில் தான் தூய்மையான ஆக்சிஜன் இல்லை என்றால் மருத்துவ மனைகளின் அவசர பிரிவுகளில் கூட ஆக்சிஜன் இல்லை. ஏன் இந்த நிலைமை? ஏழை, நடுத்தர மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாகிவிட்டதா என்று கேள்வி கேட்க தோணுகிறது?.

உலகின் பல பகுதிகளுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் நாம் ஏன்? நம் மக்களுக்கு அளிக்க இயலவில்லை .
அனைத்து தரமான பொருட்களை உற்பத்தி செய்வது நாம் தான். ஆனால் அவற்றை அனுபவிப்பது இல்லை. முதல்தர பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவிட்டு, இரண்டாம்தர பொருட்களையா அனுபவிப்பது . பழகி விட்டோமோ? அதுபோல் தான் இதுவும் ஆகிவிட்டது . அவசரப் பிரிவுகளில் கூட ஆக்சிஜன் இல்லை . அனைத்து மாநிலங்களிலும் தட்டுப்பாடு உற்பத்தியான ஆக்சிஜன் எங்கே என்றால் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

2020-ல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான ஆக்சிஜன் அளவு 352 மெட்ரிக் டன் மட்டுமே ஆனால் 2021-ல் ஏற்றுமதியானது 9000 மெட்ரிக் டன். அதாவது, 734 சதவிகிதம் அதிகமாக ஏற்றுமதி செய்வார்களா? இவர்கள் எல்லாம் எதற்கு அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இந்த கேள்வி நமக்கு மட்டும் இல்லை நீதிபதிகளுக்கும் . ஆதலால்தான் பிச்சை எடுங்கள், திருடுங்கள் ஆனால் ஆக்சிஜன் வரவேண்டும் என்று கூறியுள்ளார்கள். ஏனென்றால் நம் வீட்டு ஆக்சிஜனை தான தருமம் செய்தவர்கள், பிச்சை எடுத்தால் என்ன? திருடினால் என்ன? என்று நீதிபதிகளும் நம்மை போலவே உணர்ந்துள்ளார்கள். எல்லாவற்றுக்கும் கால் கடுக்க நின்று பழக்கப்பட்ட நமக்கு, இன்று ஆக்சிஜனுக்கும் நிற்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. உலகம் எங்கோ சென்று கொண்டு இருந்தாலும், நாம் இன்னும் அனுபவிக்க வேண்டியது எவ்வளவோ உள்ளது.

மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ்க்கும் வரிசை என்றால் என்ன செய்வது ? எல்லாம் பொறுப்பற்ற, திறமையற்ற நிர்வாகத்தின் வெளிப்பாடு. ஆரம்பத்திலிருந்தே அந்தந்த மாநிலங்கள் கொரோனா விவகாரத்தில் முடிவு எடுக்கலாம் என்று விட்டு இருந்தால் பரவாயில்லை. அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு இப்பொழுது கண்டுகொள்ளாமல் இருந்தால் எப்படி? என்ன செய்வது ? சாவு வீடாக இருந்தால் பிணமாகவும், திருமண வீடாக இருந்தால் மணமக்களாகவும் இருந்து பழக்கப்பட்ட நமது அரசியல்வாதிகளுக்கு எதையும் விட்டுவிட மனது வராதே. அதனால் இந்த குளறுபடி துயரங்கள்.முன்பு வெண்டிலேட்டர் பிரச்சினை அப்பொழுதும் ஏற்றுமதி, இப்பொழுது ஆகிசிஜன் பிரைச்சினை இப்பொழுதும் ஏற்றுமதி.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது மட்டும் இல்லாமல் இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே கூட பாரபட்சம் பார்ப்பது, அதாவது தாங்கள் ஆளுகிற மாநிலங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் அனுப்புவது பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் தருவதை தவிர்ப்பது. என்ன ஒரு பெரிய மனது இவர்களுக்கு, சாதாரண மக்கள் கூட இப்படி நடந்து கொள்வதில்லை. பெரிய பதவியில் உள்ள குறுகிய மனிதர்கள் என்று நினைக்க தோன்றுகிறது. இவர்களால் அந்த பதவிக்கே சிறுமைதான்.

நமது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என்ற அறிவிப்பு வெளியில் தெரிவிக்கும் அளவிற்கு உள்ளது. ஏனென்றால் எப்பொழுது கிடைக்கும் என்று அவர்களுக்கு தெரியாது. இவர்களெல்லாம் பதவியில் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, எந்த பிரச்சினையும் தீர்க்க இயலாது. ஆனால் அதிகாரம் மட்டும் வேண்டும். ஏன் இந்த அற்ப ஆசை இவர்களுக்கு.

மூச்சு விடுவதற்கே பிரச்சினை அப்புறம் எங்கிருந்து வாழ்வது. அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் 12 மணி நேரம் காத்திருப்பிற்கு பிறகே, அவசர சிகிசையில் இடம் கிடைக்கிறது. என்ன செய்வது எதுவும் தெரியாது, ஆனால் அதிகாரம் வேண்டும் என்றால் இப்படித்தான் ஆகும். ஆக்சிஜனை தேடி ஓடிய ஒவ்வொருவரின் புலம்பல்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *