உழவர் மூலதன மானிய திட்டத்தை செயல்படுத்துக!

ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உழவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் உழவர்கள் வாழ்வாதாரம் மற்றும் வருவாய்ப் பெருக்க உதவித் திட்டத்தை ஒதிஷா மாநிலம் அறிவித்துள்ளது. சிறு&குறு விவசாயிகள் தொடங்கி , நிலமில்லாத வேளாண் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையிலான இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதாகும். இது உழவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

ஒதிஷா மாநில அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி சிறு, குறு உழவர்கள் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரம், பூச்சிக்கொல்லி, ஆள்கூலி ஆகியவற்றுக்கு செலவிடுவதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பருவத்திற்கு ரூ.5,000 வீதம் அடுத்த 5 பருவங்களுக்கு ரூ.25,000 வழங்கப்படும். நிலமில்லாத கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.12,500 வழங்கப்படும். முதுமை, நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மாற்றுத்திறனாளி விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கவும் இந்தத் திட்டம் வகை செய்கிறது. இவை தவிர உழவர்களுக்கு ரூ.50,000 வரை வட்டியில்லாத பயிர்க் கடன் வழங்கப்படும் என்றும் ஒதிஷா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்திருக்கிறார்.

உழவர்களின் நலன் காப்பதற்காக இத்தகையத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. 2009-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நான் வெளியிட்ட உழவர்களுக்கான கொள்கை அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான ஊதியக் குழுவைப் போன்று உழவர்களுக்கான ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும், உழவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல பரிந்துரைகள் இடம்பெற்றிருந்தன. பா.ம.க. வெளியிட்ட 2018-19 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில், உழவர்கள் சாகுபடிக்கான இடுபொருட்களை வாங்குவதற்காக ஏக்கருக்கு பருவத்திற்கு ரூ.5000 வீதம் ஆண்டுக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உழவர்களுக்கு இத்தகைய மூலதன மானியம் வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு குடியரசு நாளில் தெலுங்கானா அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த ஆண்டு குடியரசு நாளில் ஒதிஷா அரசு நடைமுறைப் படுத்துகிறது. மத்திய அரசும் இத்தகையத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் சபிக்கப்பட்ட தொழில் என்றால் அது விவசாயம் தான் என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. விவசாயம் செய்து லாபம் பார்ப்பது உலகின் எட்டாவது அதிசயமாக மாறி வருவதை மறுக்க முடியாது.

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திலுள்ள விவசாயிகளின் நிலை மோசமாக உள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரையிலான 14 பருவங்களில் 7 குறுவைப் பருவங்களிலும் விவசாயம் நடைபெறவில்லை. 3 சம்பா பருவங்கள் மட்டுமே வெற்றிகரமாக சாகுபடி நடந்திருக்கிறது. கடந்த ஆண்டு சம்பா பருவத்தில் நன்கு விளைந்திருந்த பயிர்கள் கஜா புயலில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டன. விவசாயம் தொடர்ந்து தோல்வியடைந்ததால் கடந்த 7 ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து விவசாயிகளும் கடனாளிகளாக மாறியுள்ளனர். கடன் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் கடந்த 12 ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 7,000 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

விவசாயிகளை கடன் வலையிலிருந்து மீட்டு, அவர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க தற்காலிகத் தீர்வாக பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதும், நீண்டகாலத் தீர்வாக உழவர்கள் மூலதன மானியத் திட்டத்தை செயல்படுத்துவதும் அவசியமாகும். எனவே, தெலுங்கானா, ஒதிஷா ஆகிய மாநிலங்களின் வழியில் தமிழகத்திலும் ஏக்கருக்கு பருவத்திற்கு ரூ.5000 வீதம் ஆண்டுக்கு ரூ.10,000 மூலதன மானியம் வழங்க மாநில அரசு முன்வர வேண்டும். அத்துடன் உழவர்களின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, உழவர்களின் நலனுக்கானத் திட்டங்களை செயல்படுத்த வசதியாக மத்தியிலும், மாநிலத்திலும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கு மத்திய அரசும், தமிழக அரசும் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *