உலக மாற்றுத் திறனாளிகள் தினம் வைகோ உருக்கம்

வைகோ அவர்கள் உலக மாற்றுத் திறனாளிகள் தினம்குறித்து முகநூலில் வாழ்த்து அறிக்கை.

பல்வேறு காரணங்களால் ஊனம் ஏற்பட்டு, சமுதாயத்தின் எல்லா நிலையிலும் வாழ்வுரிமைக்காக மாற்றுத் திறனாளிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். உலக அளவில் 70 கோடி மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஏழு கோடி பேர் இந்தியாவிலும், 25 இலட்சம் பேர் தமிழ் நாட்டிலும் இருக்கின்றார்கள்.

வேதனையிலே சுழன்று, நெடிய இருண்ட வாழ்வில் விடியலை எதிர்பார்த்து இருப்பவர்களை அசட்டுத்தன்மையுடன் அதட்டுகிறது அதிகார வர்க்கம். காக்க வேண்டிய கரங்களே காலில் போட்டு மிதிக்கிறது. நாகரிக உலகில் மனிதாபிமானமற்ற முறையில் மாற்றுத்திறனாளிகள் நடத்தப்பட்டு வருவது வருத்தத்துக்கு உரியது.

மாற்றுத் திறனாளிகள் கேட்பது பிச்சை அல்ல; உரிமை. மாற்றுத் திறனாளிகளின் தேவைகளைக் கருணை அடிப்படையில் பார்க்கக் கூடாது; உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும். அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்காப்பதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்பதை வெட்கத்தோடு ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றப் பாதையில் தடைக்கற்களாக இருக்கும் அதிகார வர்க்கத்தின் மன ஊனத்தை உடைத்தெறிய மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளியான ஹெலன் கெல்லர் சொன்னார்: “என்னால் எல்லாவற்றையும் செய்யா முடியாவிடினும், என்னாலும் சிலவற்றை செய்ய முடியும்,” என்று.

காலத்தால் கைவிடப்பட்டவர்களே, அழுதால் நிம்மதி கிடைக்கும் என்று சாய்வதற்கு தோள்களைத் தேடுபவர்களே, இளைப்பாறுதல் எங்கே கிடைக்கும் என்று ஏங்குபவர்களே, நீங்கள் சாதிக்க பிறந்தவர்கள். நம்பிக்கையோடு இருங்கள். இன்றிருக்கும் நிலைமைகள் நிச்சயம் மாறும்.

வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டு, மாற்றுத் திறனாளிகள் சுயமரியாதையோடு அனைத்து உரிமைகளும் பெற்று, இன்புற்று வாழ டிசம்பர் 3 உலக மாற்றுத் திறனாளிகள் நாளில் தனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெறிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *