இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ஷில்பா மஞ்சுநாத், மா கா பா ஆனந்த் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம்தான் இஸ்பேடு ராஜாவும், இதய ராணியும். கதையின் நாயகன் கவுதமின் அம்மா அவருடைய அப்பாவுடன் ஏற்பட்ட மோதலால் வேறொரு வாழ்க்கையை தேடிக்கொள்கிறார். தாயின் அரவணைப்பு இல்லாமல் வளரும் கவுதம் அதிகமாக கோபப்படும், பொறுமை இல்லாத முரட்டு இளைஞனாக வளர்ந்து நிற்கிறார்.
யாருடனும் நெருங்கி பழகாத கவுதமின் வாழ்க்கையில் தாராவின் வருகை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கவுதமை காதலிக்கும் தாரா ஓர் கட்டத்தில் கவுதமின் முரட்டு தனங்கள் பிடிக்காமல் அவரை விட்டு விலகி செல்கிறார். அதன் பின் கவுதம் என்ன செய்தார், தாராவும் கவுதமும் இணைந்தார்களா என்பதை மிகுந்த சுவாரசியங்களுடன் கூறியுள்ளார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.
கவுதமாக நடித்துள்ள ஹரிஷ் நடிப்பில் பல பரிமாணங்களை அடைந்துள்ளார். கதையின் தேவைக்கேற்ப நடித்துள்ளது அவரது பலம். தமிழில் காளி படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை ஷில்பாவிற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் படமாக இந்த படம் அமைந்துள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி உள்ளார் ஷில்பா.
கவுதமின் நண்பர்களாக வரும் பாலா சரவணன், மாகாபா ஆனந்த் செய்யும் காமெடிகள் ஒன்றும் சொல்லி கொள்ளும்படி இல்லை. கவுதமின் அப்பாவாக வரும் பொன்வண்ணனும் நேர்த்தியான நடிப்பை வெளிபடுத்தி உள்ளார்.
கவின்ராஜின் ஒளிப்பதிவு படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தின் மற்றொரு பலம் பிண்ணனி இசையும், பாடல்களும் சாம் சி எஸ்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளன. கிளைமாக்ஸ் காட்சியின்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் இயக்குநராக வெற்றியடைந்து உள்ளார் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.