இலுப்பை சிறப்புகள்!!!

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை’ என்ற முதுமொழியை பல முறை கேட்டிருப்போம். ஆனால், நம்மில் எத்தனை பேர் இலுப்பைப் பூவை பார்த்திருக்கிறோம்? சுவைத்திருக்கிறோம்? குறைவாகவே இருக்கும். அதற்குக் காரணம் இலுப்பை மரங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டதே.

இருப்பையிலிருந்து இலுப்பைக்கு ஏறத்தாழ பத்தாம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியத்திலும் கல்வெட்டுகளிலும் ‘இருப்பை’ என்றழைக்கப்பட்ட இலுப்பைத் தாவரம் மது, மதுகம், மதூகம், குலிகம், சந்தானகரணி, அட்டி போன்ற இதர பெயர்களாலும் அழைக்கப்பட்டதாக பல தமிழ் நிகண்டுகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் முதல் மூன்றும் சமஸ்கிருதப் பெயர்கள், மற்றவை மருத்துவப் பெயர்கள். இதன் தாவரப் பெயர் மதூகா லாங்கிஃபோலியா (தாவரக் குடும்பம்: சப்போட்டேஸி, சப்போட்டா குடும்பம்). இதில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: நெட்டிலை இலுப்பை, அகன்றிலை இலுப்பை. இவற்றில் முதலாவது தென்னிந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் மட்டும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. இரண்டாவது இந்தியாவின் பல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் மட்டும் 22 பாடல்களில் பரவலாக பாடப்பட்டது நெட்டிலை இலுப்பைதான் என்றாலும், கிழக்கு மலைத் தொடரில் இரண்டுமே காணப்படுகின்றன.

நெட்டிலை இலுப்பை 200 முதல் 400 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியது. 10 30 மீட்டர் உயரமும் (நீடு நிலையரைய அகநானூறு 331), மூன்று மீட்டர் பருமனும் கொண்டது; கருமையான, தடிப்பான அடிமரத்தைக் கொண்டது (பொகுட்டுரையிருப்பை, திரளரையிருப்பை, குதிர்க்காலிருப்பை, கருங்கோட்டிருப்பை அகநானூறு 95, 215, 321, 331); மலையடிவாரம் முதல் 1,200 மீட்டர் உயரம்வரை காணப்படுவது; பொதுவாக பாலைத் திணையுடன் தொடர்பு கொண்டது. எனினும், கடந்த 2,000 ஆண்டுகளாக இது சாலையோரங்களிலும், தோப்புகளிலும், கோவில்களுக்கு அருகிலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளது.

பூக்களின் புகழ்:

இலுப்பை மரங்கள் நிறைந்திருந்த தமிழகப் பகுதிகள் அதன் பெயரால் அழைக்கப்பட்டன: இலுப்பூர், இலுப்பைக்காடு, இலுப்பைக்குடிக்காடு. தமிழரால் புனிதமாகக் கருதப்பட்ட இலுப்பை திருச்செங்கோடு, திருவனந்தபுரம் கோவில்களில் தல மரமாக உள்ளது. மெதுவாக வளரும் இந்த மரம் மிக அதிக வெப்பநிலை கொண்ட மணற்பாங்கான அல்லது கற்கள் நிறைந்த திறந்தவெளிகளில் காணப்படுகிறது. கோடையில் இலைகள் உதிர்ந்து, புதிய செம்புத்தகடு போன்ற கொழுந்து இலைகள் (செங்குழையிருப்பை, அங்குழையிருப்பை அகநானூறு 331, 107) மிளிரும்.

நெட்டிலை இலுப்பை வேனிற்காலத்தில் பூக்கும். பூ அரும்பு காட்டுப்பூனையின் காலடிபோல் இருக்கும் (வெருக்கடியன்ன குவிமுகிழ் இருப்பை அகநானூறு 267). பூக்கள் மஞ்சள் கலந்த வெண்மை நிறம் கொண்டவை, மணம் கொண்டவை, கொத்தாகக் காணப்படுபவை (குவிஇலை, கூடு குவி வான்பூ அகநானூறு 95, 135). பூவிதழ்கள் தடித்தவை, ஒன்று சேர்ந்து வட்ட வடிவில் அமைந்தவை (இழுதின் அன்ன பூ, நெட்டிலையிருப்பை வட்ட வான் பூ). பூக்கள் துளையுடையனவாக இருப்பதால், புழல் வீ, தொள்ளை வான்பூ, தூம்புடைத் திரள் வீ என்று விவரிக்கப்பட்டுள்ளன.

மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற பின்பு பூவின் அகவிதழ் தொகுப்பு மரத்தின் உயர்ந்த கிளைகளிலிருந்து காற்றில் சுழன்று, சுழன்று விழும் (ஆர் கழல் புதுப்பூ அகநானூறு 9, ஆர் கழல் பூ குறுந்தொகை 329). நெய்யில் தோய்த்த திரி போன்று இவை விழுவதை நற்றிணை (279) குறிப்பிடுகிறது. வெண்மைப் பூக்கள் காற்றில் மிகுதியாக வீழ்வது வெண்மையான ஆலங்கட்டி மழை வானிலிருந்து வீழ்வதுபோலத் தோன்றும் என்று மற்றொரு சங்கப் பாடல் கூறுகிறது. பூக்கள் வாடாமல் இருக்கும்போது யானைத் தந்தத்தின் நிறமும், உறுதியும் கொண்டவை. வாடிய பின் மீன் தூண்டில் போன்று இருக்கும் என்று கபிலர் கூறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலுப்பைப் பழங்கள் ஏப்ரல் முதல் ஜூன்வரை உண்டாக்கப்படுகின்றன. பழுத்தவுடன் மஞ்சள் நிறமும், ஏறத்தாழ நீள்முட்டை வடிவமும் கொண்ட பழங்கள் சதைப்பற்று கொண்டவை; உள்ளே நீள்முட்டை வடிவான, பழுப்பான, வழவழப்பான, மிளிரக்கூடிய விதைகள் காணப்படும். விதைகள் கார் காலத்தில் மழைக்குப்பின் முளைக்கின்றன. இவ்வளவு சிறப்பாக ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விவரித்த சங்கத் தமிழ் புலவர்களின் உற்றுநோக்கும் திறன்களையும், தாவரவியல் அறிவையும் இந்த இடத்தில் வியக்காமல் இருக்க முடியவில்லை.

பலவகை பயன் உணவு:

இலுப்பையின் அனைத்து உறுப்புகளும் பழங்குடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. மரக்கட்டை விறகாக மட்டுமின்றி அறைக்கலன்கள், மரச்சாமான்கள், சமையல் பாத்திரங்கள், வண்டிச்சக்கரங்கள், மரப்பெட்டிகள் போன்றவற்றின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரப்பட்டைகள் பொருட்களுக்கு சாயமேற்றவும், மூட்டுப் பிடிப்பு காய்ச்சல், தோலரிப்பு, புண்கள், வீக்கம்போன்ற நோய்களை நீக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகவும், பதவாடையாகவும் (Poultice), வலிகள், எலும்புப்பிடிப்பு நீக்கியாகவும் பயன்படுத்தப் பட்டுள்ளன. அண்மையில் குழந்தை ஈன்ற பழங்குடிப்பெண்கள் இலைகளைத் தம்முடைய மார்பகங்களில் கட்டிக்கொண்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரித்துக்கொண்டனர்.

இலுப்பைப் பயன்பாட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பது அதன் பூக்கள்தான். பூக்களின் தடித்த அகவிதழ்கள் இனிப்புச்சுவை கொண்டிருப்பதால்பழங்குடியினர் இதை சர்க்கரையைப் போன்று பயன்படுத்தினர். இதழ்களை நேரடியாகவோ, உலர்த்தியோ, அரிசியுடன் சமைத்தோ, வெல்லத்துடன் சேர்த்து உருட்டியோ, தேனில் தொட்டோ உண்டனர். பஞ்ச காலத்திலும், பாலை நிலத்திலும் இது ஒரு முக்கிய உணவாகத் திகழ்ந்தது.

பூக்களில் சர்க்கரையைத் தவிர புரதங்கள், வைட்டமின்கள், கால்சியம் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. உதிர்ந்த பூக்களை மான்கள், கிழ மாடுகள், வௌவால்கள், பறவைகள், கரடிகள் போன்ற உயிரினங்களும் உணவாக உட்கொண்டன என்பதற்கு சான்றாக பல சங்கப் பாடல்கள் உள்ளன. கன்று ஈன்ற கரடி உதிர்ந்த பூக்களையும் ஆண் கரடி மரத்தில் ஏறி அங்குள்ள பூக்களையும் உண்டதாக சில அகநானூறு பாடல்கள் குறிப்பிடுகின்றன

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *