இலங்கை கடற்படை மீது கடும் நடவடிக்கை தேவை!

பாமக நிறுவனர் ச.இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தைத்திருநாள் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீனவர்கள் வாழ்வில் இருளும், துயரமும் சூழ்ந்திருக்கிறது. வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் தாக்குவதும், சிறை பிடிப்பதும் வாடிக்கையாகி விட்ட நிலையில், இரு ஆண்டு இடைவெளியில், மேலும் ஒரு தமிழக மீனவர் சிங்களப்படையினரால் தாக்கி கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வங்கக்கடலில் நெடுந்தீவுக்கு அருகிலும், கச்சதீவுக்கு அருகிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடந்த சனிக்கிழமை சிங்களப்படை தொடர் தாக்குதலை நடத்தியது. இந்த நடவடிக்கையின் போது இராமேஸ்வரம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 28 மீனவர்களை சிங்களப்படை கைது செய்தது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 9 பேர் மீது தாக்குதல் நடத்திய சிங்களப் படைகள், அவர்களின் இரு படகுகள் மீது தங்களின் படகுகளைக் கொண்டு மோதின. அத்தாக்குதலில் இரு படகுகளும் தகர்ந்து கடலில் மூழ்கின. அப்படகுகளில் இருந்த மீனவர்கள் 9 பேரும் கடலில் விழுந்து தத்தளித்த நிலையில், அவர்களில் 8 பேரை மட்டும் சிங்களப்படை மீட்டு கைது செய்தது.

அவர்களைத் தவிர சித்தர்காடு கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி என்ற மீனவர் கடலில் மூழ்கி விட்ட நிலையில், அவரை மீட்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சிங்களப்படையின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த நான், காணாமல் போன மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன். இத்தகைய சூழலில் மீனவர் முனியசாமி உயிரிழந்த நிலையில் சடலமாக நெடுந்தீவு அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அந்த உடல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக வைத்துக் கொண்டால் கூட, அதிகபட்சமாக அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை மட்டும் தான் இலங்கை அரசால் செய்ய முடியும். ஆனால், இலங்கைப் படையினர் அதை செய்யாமல் இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் இரு படகுகளையும் தங்கள் படகுகளால் மோதி அழித்ததால் தான் அவை கடலில் மூழ்கின. அதன் தொடர்வினையாகவே மீனவர் முனியசாமி கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மீனவர்களின் படகுகளைத் தாக்கி மூழ்கடித்தல், கடலில் விழுந்து தத்தளித்த முனியசாமியை மீட்காமல் விட்டுச் சென்றது உள்ளிட்ட சிங்களப்படைகளின் செயல்களால் தான் அவர் உயிரிழந்தார். அந்த வகையில் முனியசாமியின் மரணம் திட்டமிடப்பட்ட கொடூரக் கொலை தான். இதற்கு இலங்கை கடற்படை தான் பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டிலிருந்து தப்புவதற்காக நடந்த நிகழ்வுகளை இலங்கை அரசு தலைகீழாக மாற்றி சொல்கிறது. தமிழக மீனவர்கள் நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடல் சீற்றம் காரணமாக படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என்றும், அவ்வாறு கவிழ்ந்த படகுகளில் இருந்து எட்டு மீனவர்களை உயிருடன் மீட்டதாகவும் இலங்கை கடற்படை அதன் அதிகாரப்பூர்வ செய்தியில் கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய் ஆகும். மீனவர் படுகொலையை மறைப்பதற்காகவே இலங்கை இவ்வாறு கூறுகிறது.

2017&ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6&ஆம் தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 20 வயது மீனவர் பிரிஸ்டோவை சிங்களப்படையினர் கொடூரமான முறையில் சுட்டுக் கொன்றனர். அவரது படுகொலைக்கு இரு ஆண்டுகளாக நீதி கிடைக்காத நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளைத் தகர்த்து இன்னொரு மீனவரையும் சிங்களப்படை கொன்றுள்ளது. இந்த அநீதியை அனுமதிக்க முடியாது.
இந்திய & இலங்கை மீனவளத்துறை அமைச்சர்களிடையே கடந்த 2017&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி கொழும்பில் நடைபெற்ற இரு தரப்புப் பேச்சுகளின் போது,‘‘ எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடலோரக் காவல்படையால் இலங்கை மீனவர்களோ, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்களோ கைது செய்யப்படும் போது உடலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் தாக்கப்படுவதோ, உயிரிழப்புகளோ ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டும்’’ என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய ஒப்பந்தத்துக்குப் பிறகு தான் மீனவர் பிரிஸ்டோ சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வும், இப்போது அப்பாவி மீனவர் முனியசாமி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காரணமானோருக்கு பாடம் புகட்டப்பட வேண்டும்.

1980-ஆம் ஆண்டுகளில் தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 35-ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் சுமார் 800 மீனவச் சகோதர்களை சிங்களப் படையினரின் கொலை வெறிக்கு தமிழகம் பலி கொடுத்திருக்கிறது. இன்னும் எத்தனை பேரை பறிகொடுக்க வேண்டும் என்பது தான் மீனவர்கள் எழுப்பும் வினா ஆகும். மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமானால், இந்தியாவின் வலிமையை இலங்கை புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும். அதற்காக, மீனவர் படுகொலை குறித்து இலங்கை கடற்படையினர் மீது இந்தியா வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். அதுமட்டுமின்றி, கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுகளுடன் இலங்கை அரசு விடுதலை செய்வதை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் உயிரிழந்த மீனவர் முனியசாமியின் குடும்பத்திற்கு அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *