இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கப்பட்ட ஹீரோ

கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.

தமிழ்நேரலை

தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் தொடர்களில் 300 ரன்களுக்கு மேல் அடித்த இந்தியர், தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் சதமும்,13 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக அரை சதமும் கண்ட ஒரே வீரர் கவுதம் கம்பீர். இவர் தலைமையின் கீழ் விளையாடிய 6 சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி. இது போன்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கம்பிரின் 38 வது பிறந்த நாள் இன்று.

இவர் 2003 ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.2005 ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். சேவாக், சச்சின், கங்குலி என இந்திய அணியின் துவக்க பேட்டிங்க்கு கடுமையான போட்டி நிலவியதால் 2007 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு மறுக்கபட்டது. அதில் இந்திய அணி முதல் சுற்றில் வெளியேற, அடுத்த நான்கு மாதங்களில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்றார். அதில் தன் திறமையை காட்டிய கம்பீர் மூன்று அரை சதங்களுடன் மொத்தம்227 ரன்கள் எடுத்தார். இறுதி போட்டியில் 54 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த டி20 உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரரும் கம்பீர்தான்.

2008ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா அணிகளுக்கு இடையே காமன்வேல்த் பேங்க் ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான்களே தடுமாறும் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட கம்பீர் அந்த தொடரில் சிட்னி, கப்பாவில் 2 சதங்கள் அடித்தார். அந்த தொடரில் மொத்தம் 440 ரன்கள் அடித்த கம்பீர் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சிறப்பையும் பெற்று இந்திய அணி கோப்பையை வெல்ல தன் சி்றந்த பங்களிப்பையும் தந்தார்.

2008ஆம் ஆண்டு இறுதியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அதில் நாக்பூரில் நடைபெற்ற 3 வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த கம்பீர் அப்போட்டியில் ஷேன் வாட்சன் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அடுத்த போட்டியில் விளையாட ஐசிசியால் தடை செய்யப்பட்டார். இருந்த போதிலும் அத்தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் கம்பீர் முதலிடத்தை பெற்றார். ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் ஸ்டெலிஜ்ங்ல் ஈடுபட்ட போது பேட், வாய் இரண்டாலும் அவர்களுக்கு பதில் அளித்தார்.

2009ம் ஆண்டு நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 41 ஆண்டுகளுக்கு பிறகு 1_0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதில் மொத்தம் 445 ரன்கள் அடித்து ஆவரேஜ் 85 என மிரள வைத்தார் கம்பீர். அத்தொடரில் நேப்பியர்ல் நடந்த இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து 619 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 305 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது.314 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடையும் என்றே அனைவரும் நினைத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் நியூசிலாந்தின் வேக பந்து வீச்சை தொடருந்து 5 செஷன்கள சமாளித்து பேட்டிங் செய்த கம்பீர் 436 பந்துகள் சந்தித்து 137 ரன்கள் எடுத்தார்.இதனால் போட்டி டிரா ஆனது. இந்திய அணி அத்தொடரை வெல்ல இந்த போட்டி டிரா ஆனது முக்கிய காரணம் ஆகும்.

2009 ஆம் ஆண்டு கம்பீரின் கிரிக்கெட் வாழ்வில் பொற்காலம் என்றே கூறலாம். அந்த வருடத்தில் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்தது உடன் ஐசிசியால் சிறந்த டெஸ்ட் வீரராகவும் அறிவிக்கபட்டார்.

2010 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கம்பீரின் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடரை 5_0 என கைப்பற்றியது.

2011 உலக கோப்பையில் நான்கு அரைசதங்களுடன் 393 ரன்கள் எடுத்தார் கம்பீர். இலங்கைக்கு எதிரான இறுதி போட்டியில் சேவாக் டக் அவுட்லிலும், கிரிக்கெட் கடவுள் சச்சின் 18 ரன்களிலும் வெளியேற அனுபவம் இல்லாத கோலி உடன் கடுமையான நெருக்கடியில் பாட்னர்ஷிப் அமைத்தார் கம்பீர். அவர் 122 பந்துகளில் அடித்த 97 ரன்களை தோனி 79 பந்தில் அடித்த 92 ரன்களிலும் இறுதி சிக்ஸரிலும் மறந்தது கிரிக்கெட் உலகம்.

அதன் பிறகு தோனியுடன் ஏற்பட்ட மோதலினாலும் , ஃபார்ம் அவுட்லினாலும் அணியில் இருந்து தொடர்ந்து ஓரங்கட்டபட்டார்.. அதன் பின் ஐபிஎல்லில் 2012,2014 ஆம் ஆண்டுகளில் இவரின் தலைமையின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கோப்பையை வென்றது.

களத்தில் ஆக்ரோஷமாக செயல் பட்டாலும் தனிப்பட்ட வாழ்வில் கம்பீர் நல்ல மனிதர். ஏழை குழுந்தைகளுக்கு கல்வி உதவிகளும், சென்னை புயல் போன்ற சமயகளில் நிதி உதவியும் செய்து உள்ளார்.

2007 டி20 உலககோப்பை,2011 உலககோப்பை, ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் பேங்க் சீரியஸ் போன்றவற்றை இந்திய அணி வென்றதை டோனியின் சிறந்த கேப்டன்ஷிப் என கொண்டாடும் இந்திய ரசிகர்கள் அவற்றில் கம்பீரின் பங்களிப்பை நினைவில் வைத்து உள்ளார்களா என்பது சந்தேகமே….

எது எப்படியாக இருந்தாலும் ஒரு இந்திய கிரிக்கெட் ரசிகனாய் கவுதம் கம்பீர்க்கு இதயப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *