இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ராகுல் டிராவிட் ஏற்க மறுத்து விட்டார் என்று வினோத்ராய் கூறினார்.
2017-ம் ஆண்டில் கேப்டன் விராட்கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதை அடுத்து தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கும்படி ராகுல் டிராவிட்டிடம் கேட்டதற்கு அவர் மறுத்து விட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவராக சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டிருந்த வினோத் ராய் தற்போது ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
கும்ப்ளே விலகலை தொடர்ந்து 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்குமாறு கேட்டுக் கொண்டோம்.
ஆனால் அவர் தனது மகன்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட வேண்டியதும் இருப்பதால் தன்னால் அந்த பதவியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவரது வேண்டுகோள் நியாயமாக இருந்ததால் நாங்கள் அதனை ஏற்றுக் கொண்டோம் என்றார்.