இந்தியாவின் பாதுகாப்பை அடகு வைத்த மோடி! – வைகோ

தாராபுரம் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்குபெற்று உரையாற்றிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ அவர்கள்  இந்தியா ஒரு ஆபத்தான கட்டத்தைக் கடந்துசெல்ல வேண்டி இருக்கிறது. மிகுந்த கவலை அளிக்கிறது. திருமுருகன் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள், திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாளை பக்தியுடன் வழிபடும் பக்தர்கள், தில்லையில் சிற்றலம்பலத்தை வழிபடும் பக்தர்கள், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சி காமாட்சி அம்மன், காளியம்மன், வடக்கத்தியம்மன், முத்தாலம்மனை வழிபடும் பக்தர்கள். இருக்கிறார்கள்.

அதே போல் இதோ பிறை தெரிகிறதே, இந்தப் பிறைக் கொடியை நேசிக்கக்கூடிய இசுலாமியப் பெருமக்கள் பெருமளவில் இங்கே வாழ்கிறார்கள். தேவாலயங்களுக்குச் செல்கிற கிறிஸ்தவப் பெருமக்கள் வாழ்கிறார்கள். எல்லோரும் ஒற்றுமையாக, அண்ணன் தம்பிகளாக வாழ்வது மிகுந்த மகிழ்ச்சியானது. இதில் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என்ற அச்சம் என்னை வாட்டி வதைக்கிறது.

இந்திய நாட்டின் பல நாடாளுமன்றவாதிகளைப் பார்த்திருக்கிறேன். பல பிரதமர்களோடு வாதிடக்கூடிய வாய்ப்பையும் கடந்த காலங்களில் நான் பெற்றிருக்கிறேன். ஆனால் எந்த ஒரு தலைமை அமைச்சரும் மோடியைப் போல ஆபத்தாகப் பேசியது இல்லை. காஷ்மீர் மாநிலம்- புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் ஒரு இசுலாமிய சகோதரன் உட்பட நமது வீரர்கள் 42 பேர் இறந்துபோனார்கள். அவர்கள் சிந்திய இரத்தத் துளிகளுக்கு தலைவணங்கி நாம் வீரவணக்கம் செலுத்துகிறோம். இராணுவ வீரர்கள் இந்த நாட்டின் சொத்து, காவல் தெய்வங்கள். அவர்களை எந்தக் கட்சியும் உரிமை கொண்டாட முடியாது; இதுவரை யாரும் உரிமை கொண்டாடியதும் கிடையாது.

ஆனால் கோவையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் இந்தியாவின் தலைமை அமைச்சர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்கள் எல்லை தாண்டி பேசுகிறார். இவர் கையில் மறுபடியும் அதிகாரம் வந்தால் இந்தியா என்ன ஆகுமோ என்ற அச்சம் என்னை வாட்டி வதைக்கிறது. உயிர் துறந்த 42 பேரின் இரத்தத்தை நினைத்து முதல் வாக்காளர்கள் ஓட்டுப் போடுங்கள் என்று கூறுகிறார். யாருக்கு ஓட்டுப் போடச் சொல்கிறீர்கள்? இப்படிப் பேசுவது, சர்வாதிகாரியின் பேச்சு அல்லவா? முசோலினி போன்றவர்கள் பேச்சு அல்லவா? ஹிட்லர், இடி அமீன் போன்றவர்களின் பேச்சு அல்லவா? நாட்டின் பிரதமர் இப்படிப் பேசலாமா? ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கின்ற விதத்தில் இருக்கிறது அவரது பேச்சு.

ஐந்தாண்டு காலத்தில் மதச்சார்பின்மையைப் பற்றி வலியுறுத்திப் பேசிய பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் படுகொலைக்காவது பிரதமர் கண்டனம் தெரிவித்தது உண்டா? இந்தியாவில் ஜனநாயகமும், மதச்சார்பின்மையும் காப்பாற்றப்பட வேண்டும் என்று தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்த மிகச் சிறந்த சிந்தனையாளர் கல்புர்கியை நட்ட நடுத் தெருவில் சுட்டுக் கொன்றார்களே நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா? அதே போன்ற சிந்தனை கொண்ட நரேந்திர தபோல்கர். அவர் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர், பார்சி, சமணர், சீக்கியர், பௌத்தர் என்ற வேறுபாடு இருக்கக்கூடாது; அது அவரவர் மத உரிமை என்று அவர் தொடர்ந்து எழுதியதற்காகப் படுகொலை செய்தார்கள். அதைப்போல் கோவிந்த் பன்சாரேவையும் கொன்றார்கள். கௌரி லங்கேஷ் என்ற சகோதரியை வீட்டு வாசலில் வைத்துச் சுட்டுக் கொன்றதற்கு நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா?

“முஸ்லிம்களே இந்த நாட்டைவிட்டு வெறியேறுங்கள்” என்று ஒரு மத்திய அமைச்சர் பேசினார். இந்தப் பேச்சு மிக மிக ஆபத்தானது. அவரைப் பதவியிலிருந்து நீக்கினீர்களா? தாத்ரியில் 105 டிகிரி காய்ச்சலில் சாகக் கிடந்த முகமது அக்லக், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருக்கிறார் என்று தெருவில் இழுத்துப் போட்டு அடித்தே கொன்றார்களே அதற்குக் கண்டனம் தெரிவித்தீர்களா? இரத்தக் களரிகள் ஏற்படட்டும் என்ற எண்ணத்தில்தானே, பாகிஸ்தான் நாடே வந்திருக்காது, காங்கிரஸ் தலைவர்கள் செய்த தவறால்தான் பாகிஸ்தான் வந்தது என்று கூறுகிறீர்கள். ஐந்தாம் வகுப்பு மாணவனிடம் கேட்டால்கூட இந்திய சரித்திரத்தைச் சொல்வான்.

“என் உடலைக் கூறு போட்டுத்தான் நாட்டைப் பிளக்க முடியும்” என்று காந்தியார் கூறினார். மூன்றாயிரம் ரூபாய் கோடி செலவில் படேலுக்கு சிலை எழுப்பியிருக்கிறீர்களே, அந்தப் படேலின் பேச்சுக்களைத் திரும்பப் படித்துப் பாருங்கள். பாகிஸ்தான் பிரியக்கூடாது என்று சர்தார் வல்லபாய் படேல் கூறினாரா? அன்றைய கால கட்டத்தில் அது காலக் கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. “அடைந்தால் பாகிஸ்தான். இல்லையேல் கபர்ஸ்தான்” என்று ஒரு பக்கம் முஸ்லிகள் நிறைந்து வாழ்கின்ற பகுதியில் போராடுகிறார்கள். முகமது அலி ஜின்னா அதற்குத் தலைமை தாங்கினார். இரண்டு பக்கத்திலும் இரத்தம் ஆறாக ஓடியது. இந்துக்களும் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம்களும் கொல்லப்பட்டார்கள். இங்கேயும் நடந்தது, கிழக்குப் பாகிஸ்தானினும் நடந்தது. நள்ளிரவில் நாடு சுதந்திரம் அடைந்தது.

“உலகம் உறங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் விழித்துக் கொண்டு விட்டோம்” என்று பண்டித ஜவஹர்லால் நேரு பேசுகிறபோது, கல்கத்தா அருகில் இந்து முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று உத்தமர் காந்தியடிகள் நடந்து போய்க் கொண்டு இருந்தார். அவரைக் கொல்ல வேண்டும் என்று ஜனவரி 20 ஆம் தேதி குண்டு வீசினார்கள். அன்றைக்கு அவர் தப்பிவிட்டார். பத்து நாட்கள் கழித்து மாலை 5 மணி 12 நிமிடத்துக்கு பிர்லா மாளிகை பிரார்த்தனைக் கூட்டத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு வந்து சுட்டான் கொலைகாரன் நாதுராம் விநாயக் கோட்சே.

இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்றார் தந்தை பெரியார். “தம்பி, யமுனைக் கரையில் நெருப்பு காந்தியின் சடலத்தின் மீது எரியவில்லை; மக்கள் நெஞ்சில் எரிகிறது” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் வானொலியில் உருக்கமாகப் பேசினார்.

கடந்த மாதம் அலிகாரில்உலகம் போற்றுகின்ற உத்தமர் காந்தியடிகளைப் போல ஒரு உருவத்தைச் செய்து, இந்து, முஸ்லிம் ஒற்றுமையாக வாழுகின்ற அலிகாரில், வீர கர்ஜனை புரிந்த அபுல்கலாம் ஆசாத் முழக்கமிட்ட அலிகாரில், காந்தியை இன்றைக்கு நாங்கள் சுட்டுக் கொல்லப் போகிறோம் என்று அறிவித்து விட்டு, ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். ஏதோ நடக்கப் போகிறது என்று அனைவரும் பதறிப் போனார்கள். கூட்டம் கூடியது. காந்தியைப் போன்ற உருவத்தைக் கொண்டு வந்தார்கள். இந்து மகா சபையின் தலைவி பூஜா அதைச் சுட்டார். சுட்டவுடன் இரத்தம் வருவதைப் போன்று காட்சி அமைத்திருந்தார்கள். கீழே தள்ளி, காலால் மிதித்தார்கள்; பின்பு நெருப்பு வைத்தார்கள். “காந்தியைச் சுட்டுக் கொன்றோம் நாதுராம் விநாயக கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைப்போம்,” என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி உலக நாட்டுத் தலைவர்களின் உள்ளத்தை எல்லாம் உலுக்கியது. நாடாளும் பிரதமர் அவர்களே நீங்கள் கண்டனம் தெரிவித்தீர்களா? உங்கள் மனம் பதறவில்லையா? பதட்டம் அடையவில்லையா? உங்கள் இதயத்தில் ஈரம், இரக்கம் எதுவும் இல்லையா? நாட்டின் 130 கோடி மக்களுக்கும் நீங்கள் தலைவர் அல்லவா? இந்தச் சம்பவத்தைக் கண்டித்து உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக இருக்கின்ற, நீங்கள் காலால் இட்டதை தலையால் செய்து கொண்டிருக்கின்ற யோகி ஆதித்யநாத்தை அழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிந்து, கைது செய்யச் சொன்னீர்களா? இல்லையே, கண்டிக்கக்கூட இல்லையே? அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன? இதுதான் உங்கள் நோக்கமா? காந்தியாரை தெருத் தெருவாகச் சுட வேண்டுமா? கோட்சேவுக்கு ஊர் ஊராகச் சிலை வைக்க வேண்டுமா? நாட்டின் குடிமக்களில் ஒருவனாகக் கேட்கிறேன், இது உங்கள் நோக்கமா? திட்டமா? புல்வாமாவில் நடைபெற்ற சம்பவத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கிறீர்களே, இது எவ்வளவு ஆபத்தானது? இப்படிப்பட்ட கொடிய சம்பவங்கள் நடந்துவிடக் கூடாது.

ஜி.எஸ்.டி.யால் தொழில் முடக்கம்

ஆயிரக்கணக்கான மளிகைக் கடைகளைப் பார்க்கின்றேன். சரக்கு, சேவை வரிக்காக எத்தனை ஆடிட்டர்களை வைத்துக் கொள்வீர்கள்? உங்கள் தொழில் நலிந்தது. கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் மூடப்பட்டு, ஐம்பது இலட்சம் பேர் வேலை இழந்து இருக்கின்றார்கள். வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்க ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைக்கு ஏற்படுத்திக் கொடுப்பேன் என்று கூறினாரே பிரதமர். யாருக்காவது வேலை வாய்ப்புக் கொடுக்க முடிந்ததா? 15 இலட்ச ரூபாய் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும் என்று அறிவித்தீர்களே, 15 ரூபாயாவது வந்து சேர்ந்ததா? எதுவும் இல்லை.

450 ரூபாயாக இருந்த எரிவாயு சிலிண்டர் விலை இன்றைக்குத் 900 ரூபாய். கொண்டுவந்து கொடுப்பவருக்கு 100 என்று ஆயிரம் ரூபாய் இல்லாமல் எரிவாயு சிலிண்டர் ஒரு வீட்டுக்குச் சென்று சேர முடியாது. 50 ரூபாய், 60 ரூபாய் கொடுத்து கேபிள் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்றைக்கு அது 250 ரூபாய். கட்டாய வசூல் போன்று ஆகிவிட்டது.

தாராபுரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு 18 கோடி ரூபாயில் புறவழிச்சாலை. பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம் ஒப்பந்தம் செய்யப்பட்டபோதே, கேரளத்தில் இடைமலையாறு கட்டிக் கொண்டால், இங்கே ஆனைமலை ஆறு, நல்லாறு கட்டிக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டு ஆர்.டி.மாரியப்பன், கணேசமூர்த்தி ஆகியோரை அழைத்துக்கொண்டு கேரளாவின் தலைமைச் செயலகம் அமைந்துள்ள திருவனந்தபுரத்துக்கே சென்று, அப்போது முதலமைச்சராக இருந்த உம்மண் சாண்டி அவர்களைச் சந்தித்து இதை நினைவூட்டினோம். இடைமலையாறு திட்டம் இன்னும் முடியவில்லை, முடிந்தவுடன் நீங்கள் கட்டிக்கொள்ளலாம் என்றார் உம்மன் சாண்டி. இப்போது முடிந்து விட்டதாக அறிவித்து விட்டார்கள். இதே பகுதியில் ஒரு பக்கத்தில் சர்க்கார் மதி என்ற இடத்திலிருந்து திரிமூர்த்தி அணை வரையிலும் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது என்ற காரணத்துக்காக செவ்வட்டக் காhல்வாய் காங்கீரிட் தளம் அமைத்து ஏறத்தாழ 186 கோடி ரூபாய் மதிப்பில், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதையும் நான் இங்கே நினைவூட்ட விரும்புகின்றேன்.

அன்புக்குரியவர்களே, ஏழை எளிய மக்களின் துயரத்தை உணர்ந்துதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாகச் சொன்னார், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம். கால் பவுன், அரை சவரன், முக்கால் சவரன், ஒரு சவரன் என்று ஐந்து சவரன் வரை நகையை ஈடு வைத்துக் கடன் வாங்கிய ஏழை மக்களின் கண்ணிரைத் துடைக்க கடன்களை இரத்து செய்தார். அதேபோல ராகுல் காந்தி அவர்களும், இவர்தான் பிரதமராக வரவேண்டும் என்று திமுக தலைவர் சுட்டிக் காட்டினாரே அவர் பன்முகத் தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கின்ற தலைவராக இருக்கிறார். அதனால்தான் பறிக்கப்பட்ட மாநில உரிமைகள் மீண்டும் மாநிலங்களுக்கே கொடுக்கப்படும் என்கிறார்.

இன்னொரு பக்கத்தில் நரேந்திர மோடி பள்ளிக்கூடத்துக்குள் நாங்கள் சமஸ்கிருதத்தைத் தான் கொண்டு வந்து திணிப்போம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கிறார். இரண்டும் இரண்டு துருவங்கள். ஒரு பக்கம் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பாருங்கள் . இன்னொரு பக்கம் பா.ஜ.க. தேர்தல் அறிக்கையைப் பாருங்கள்.

ஏழ்மையில், வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு மாதம் ஆறாயிரம் ரூபாய் வீதம், வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்படும் என்று அறிவித்து இருப்பதை அனைவரும் மகிழ்ச்சியோடு வரவேற்று இருக்கின்றனர். எனவே தமிழகத்தில் இன்றைக்கு எத்தகைய வஞ்சகத்திற்கு ஆளாகி இருக்கின்றார்கள் என்றால், எதிர்காலத்தில் தமிழகத்தின் பெரும் பகுதி நாசமாகி விடுமோ? என்ற பயத்தில் இருக்கின்றேன்.

என்னுடைய வாழ்நாளில் நான் அதைப் பார்ப்பேனா தெரியவில்லை. என் வாழ்நாளுக்குப் பின்னால் யோசித்துப் பார்க்கின்றேன். அதனால்தான் இந்த 55 வருடத்தில் பலமுறை நான் போராட்டங்கள் நடத்தி, இதுவரை 5 முறை சிறையிலும் இருந்திருக்கிறேன். மிகுந்த கவலையோடு சொல்கிறேன், திட்டமிட்டுத் தமிழகத்தை நரேந்திர மோடி அரசு பழிதீர்க்கிறது. ஆட்சிக்கு வந்து ஆறு மாதத்துக்குள் கர்நாடகத்தில் மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். நீங்கள் பணத்தை ஒதுக்கீடு செய்து, கட்டிக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். மேகேதாட்டில் அணைகட்டிய பிறகு மேட்டூருக்குத் தண்ணீர் வராது. காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் எந்த இடத்துக்கும் கிடைக்காது. 25 இலட்சம் ஏக்கர் நஞ்சை நிலம் அடியோடு பாழாகி, தரிசு நிலமாகி, நஞ்சை கொஞ்சி விளையாடிய தஞ்சை பஞ்சப் பிரதேசமாகி, செந்நெல் வயல்கள், செழுங்கரும்புத் தோட்டங்கள், எங்கு நோக்கினும் மா, பலா, வாழை என்று இயற்கை அன்னையின் அரவணைப்பில் இருந்த தஞ்சை எத்தியோபியாவைப் போல மாறும். எலும்பும் தோலுமாக பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்ற நிலைமைக்கு நம் மக்கள் ஆளாவார்கள். நான் தேர்தலுக்காகவோ, ஓட்டுக்காகவோ சொல்லவில்லை. மாதக் கணக்கில் ஊர் ஊராகச் சென்று இப்படிப்பட்ட ஆபத்து இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.

தமிழகத்தின் பழம் பெருமை

அரசியல் நிர்ணய சபையில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள், இந்த நாட்டின் ஆட்சி மொழியாக, தேசிய மொழியாக இருக்க முழுத் தகுதியும் ஒரே ஒரு மொழிக்குத்தான் உண்டு. அது பழமையான செந்தமிழ் மொழிக்குத்தான் உண்டு என்று சொன்னரே, அந்தத் தமிழ் மொழி, அந்த இனம் உலகத்தின் முதல் கலாச்சாரத்தை, நாகரிகத்தை கண்டறிந்த இனம்.

தாமிரபரணி ஆற்றங்கரை ஆதிச்சநல்லூரிலிருந்து எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு கார்பன் சோதனைக்கு அனுப்பினார்கள். மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அவர்கள் சொல்கிறார்கள். இன்னும் பல இடங்களில் பார்த்தால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் என்கிறார்கள். கடலுக்கு அடியில் புதைந்து கிடக்கும் பூம்புகார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று சேனல்-4 அறிவிக்கிறது.

முதன் முதலில் சுவையான உணவு உண்பதற்கு, மானத்தை மறைப்பதற்கு ஆடைகள் தரிப்பதற்கும், குகைகளில் இருந்த நிலை மாறி, வீடு கட்டி வாழ்ந்ததற்கும் நாகரிகம் கண்டறிந்த இனம் இந்த இனம். மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு என்று இவர்களுக்கு இந்த உணர்வு இருக்கிறது. இதை ஒழிக்க வேண்டும். புல்டோசர் கொண்டு இடிப்பதைப் போல இடித்து எல்லாவற்றையும் ஒற்றைத்தன்மை ஆக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அப்படி ஒற்றைத் தன்மையாக்க முனைந்தால் இந்தியா என்ற நாடு இருக்காது. ஒற்றைத் தன்மை எந்தக் காலத்தில் இருந்தது?

சஞ்சீவ் ரெட்டி விடுதலைப் போராட்டத்தில் எட்டு வருடங்கள் சிறையில் இருந்தவர். குடியரசுத் தலைவரானவுடன் பேசினார், “எந்தக் காலத்திலும் இந்தியா என்ற நாடாக இல்லை. பிரிட்டிஷ்காரன் வந்த பிறகு அவன் ஏற்படுத்தினான்” என்று சொன்னார். பன்முகத் தன்மையை நீங்கள் அழிக்க நினைத்தால் இந்தியாவின் எதிர்காலம் பேராபத்துக்கு உள்ளாகிவிடும். எங்கும் இரத்தக் களரியாகத்தான் இருக்கும். இதுதான் அவர்கள் நோக்கம், திட்டம்.

நான் சிறைக்குப் பயப்படவில்லை. எதிர்த்துப் போராடுவேன். ஆயுள் தண்டனையே கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன். அதைப்பற்றி நான் கவலைப்படுகிறவன் அல்ல. ஆனால் வரப் போகிற ஆபத்தை இந்த நாட்டு மக்கள் உணர வேண்டும். தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும் என்று சொல்வதற்குக் காரணம் இருக்கிறது.

நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம். உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு முடிந்து போன பிரச்சினை. அதற்குப் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை நரேந்திர மோடி அரசு வேண்டுமென்றே கொடுக்கிறது. கேரளாவில் அவர்கள் ஒரு இடம்கூட வெற்றிபெற முடியாது. பின்பு ஏன் கேரளாவுக்கு அந்த அனுமதி கொடுக்கிறது? அவன் பென்னி குயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று அறிவித்து விட்டான். அணை உடைந்தால் பாண்டிய மண்டலத்தில் 85 இலட்சம் ஏக்கர் பாசனம் இருக்காது. ஒரு கோடி மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இருக்காது. ஆக, ஒரு பக்கம் பாண்டிய மண்டலம் அழிவுறும். மறு பக்கம் சோழ மண்டலம் அழிவுறும். அடுத்த பக்கம் உயர் அழுத்த மின் கோபுரங்களும், கெயில் குழாய்களையும் கொண்டு வந்து கொங்கு மண்டலத்தின் பல பகுதிகளை அழித்து விடலாம். நமது வியாபாரிகள் வாழ்வும் நசிந்துபோனது. ஆலைகள் மூடப்பட்டு விட்டன. விவசாயிகளான வேளாண் பெருங்குடி மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக தற்கொலை செய்து கொண்டு மடிகின்ற அவலம் எற்பட்டு இருக்கின்றது.

இப்படிப்பட்ட சூழலில் இந்தியாவின் ஜனநாயகத்தைப் பாதுகாக்க, மக்களாட்சித் தன்மையைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும். கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவர்கள் ஆதரவு கொடுத்து வந்த காரணத்தால்தான், 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு விஜய் மல்லையா வெளிநாட்டுக்குப் போவதற்கு இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு இலண்டனுக்குத் தப்பிச் செல்ல எப்படி விசா கொடுக்கப்பட்டது? விக்ரம் கோத்தாரி 3,850 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு எப்படி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல முடிந்தது? நிகில் சர்வேஸ்ராம் ஆந்திராவில் மூன்று வங்கிகளில் 3,850 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விட்டான். இப்படி 23 பேர் 90 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்று விட்டார்கள்.

ரபேல் வானூர்தி பேர ஊழல்

இதுவரை நீங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிரதமராகத்தான் இருந்து வந்தீர்கள். அதனால் தான் வீர மரணம் அடைந்த 42 பேரை நினைத்து ஓட்டுப் போடச் சொல்கிறீர்கள். பெங்களூரில் இருக்கும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தோடு சேர்த்து, தஸ்ஸால்ட் ஏவியேஷன் என்கின்ற பிரஞ்சுக் கம்பெனியோடு போர் விமானங்கள் வாங்குவதற்கு ஏற்பாடு செய்து, முதலில் உங்களுக்கு 18 விமானம்தான் நாங்கள் தருவோம். மீதி 108 விமானங்களை பெங்களூரில் நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். நாங்கள் தொழில்நுட்பம் தருகிறோம் என்றார்கள். இதுதான் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது போட்ட ஒப்பந்தம்.

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தவுடன் அனில் அம்பானியை அழைத்துக்கொண்டு போனார். அந்த ஒப்பந்தத்தைக் கிழித்து எறிந்தார். புதிய ஒப்பந்தம் போடுகிறார். இந்தப் புதிய ஒப்பந்தத்தில் நம்முடைய பொதுச் சொத்தான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் கிடையாது. போர்த் தளவாடங்களுக்கு ஒரு ஆணிகூட செய்யும் அனுபவம் இல்லாத அனில் அம்பானியை அழைத்துக் கொண்டு சென்று, ‘அப்பானி டிபென்ஸ்’ என்று உப்புமா கம்பெனியைத் தொடங்கி, இந்தக் கம்பெனியோடு தஸ்ஸால்ட் ஏவியேஷனை ஒப்பந்தம் செய்ய வைத்து, 526 கோடிக்கு வாங்குகின்ற விமானத்தை, 1670 கோடிக்கு வாங்க நீங்கள் பேரம் பேசி ஒப்பந்தம் போட்டீர்கள் என்று இந்து ஆங்கில ஏடு பகிரங்கமாக வெளியிட்டது. அரசாங்க ஆவணங்களைத் திருடிக் கொண்டு போய் விட்டார்கள் என்று நீங்கள் மிரட்டிப் பார்த்தீர்கள். பின்பு நீதிமன்றத்தில் அட்டார்னி ஜெனரல் கூறினார், திருடிச் செல்லவில்லை. நகல் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்று. நீங்கள் வழக்குப் போட்டால் போடுங்கள். நாங்கள் உண்மைகளை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் என்று இந்து பத்திரிகை உரிமையாளர்கள் கூறிவிட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் விமானப் படைதான் முக்கியமான படை. இந்த விமானப் படையிலேயே நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்துவிட்டீர்கள் என்று உங்கள் மீது நான் குற்றம் சாட்டுகின்றேன்.

உங்களை எதிர்ப்பதற்கு தமிழகத்தில் உள்ள அரசுக்கு குலைநடுக்கம் எடுக்கிறது. பருப்பு ஊழல், ஆம்னி பஸ் ஊழல் என்று பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுக்கள் இவர்களை மிரட்டுகின்றன. அஞ்சி நடுங்கிக் கிடக்கிறார்கள்.

சுயமரியாதையோடு இவ்வளவு ஆபத்துகளையும் தடுத்து நிறுத்துவதற்கு நீங்கள் குரல் கொடுத்தீர்களா? நீட் தேர்வால் நம்மை நாசப்படுத்தினார்கள். 1176 மதிப்பெண் வாங்கிய ஓலைக் குடிசையில் பிறந்த ஏழை மாணவி அனிதா டாக்டராக முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டு மாண்டுபோனாள். அனிதா சாவுக்கும், கடலூர் பிரதிபா சாவுக்கும் காரணம் மத்திய அரசு என நான் குற்றம் சாட்டுகின்றேன்.

தூத்துக்குடி படுகொலைகள்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் 22 வருடங்களாக நான் அறவழியிலும், நீதிமன்றங்களிலும் போராடி வருகின்றேன். நூறு நாட்கள் அமைதியாக அறவழியில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்க வருகிறார்கள் என்றவுடன், இனி யாரையும் ஸ்டெர்லைட் கம்பெனியை எதிர்த்துப் போராட விடக்கூடாது என்று ஸ்டெர்லைட் கம்பெனியின் கூலிப் படையாக உங்கள் காவல்துறையை மாற்றினீர்கள் என்று மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது நான் குற்றம் சாட்டுகின்றேன்.

கால்வதுறையில் எல்லோரையும் நான் மதிப்பவன். நானும், சகோதரர் கணேசமூர்த்தி அவர்களும் சிறையில் இருந்தபோது, எங்களுக்கு இருக்கக்கூடிய பாதுகாவலர் சாப்பிட்டால்தான் நாங்கள் சாப்பிடுவோம். காவலர்களை இரவும் பகலும் சாலையில் பீட் போடக்கூடாது என்றும், முக்கிஸ்தர்கள் வந்தால் வெயிலிலேயும், மழையிலேயும் காவல்துறையினரைக் காக்க வைக்கக் கூடாது என்றும் நாடாளுமன்றத்தில் பேசியவன் நான். காவல்துறையில் நேர்மையான, கண்ணியமான, மனசாட்சி உள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள். அங்கு கருப்பு ஆடுகளும் இருக்கின்றன. அரசாங்கம் சொன்னதற்காக எந்தவித பஞ்சமா பாதகத்தையும் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டுபோய் தூத்துக்குடியில் பொதுமக்களைச் சுட்டுப் பொசுக்குங்கள் என்று கொன்றுவிட்டீர்கள்.

மனு கொடுக்க வருகிறார்கள் என்றவுடன், மாவட்ட ஆட்சியரை கோவில்பட்டிக்குப் போகச் சொல்லிவிட்டு, மனுக்கொடுக்க நடந்து வருபவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு வருவதற்கு முன்பாகவே அங்கு இருந்த அரசு வாகனங்களுக்கு காவல்துறையினர் தீ வைத்தார்கள். நான் சொல்லவில்லை, மூன்று முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூன்று முன்னாள் டி.ஜி.பி.கள் கொண்ட குழு, ஹென்றி திபேன் வைத்த மக்கள் கண்காணிப்புக் குழு 2400 பக்கத்திற்கு அறிக்கை கொடுத்திருக்கிறது. அவர்கள் கண்மண் தெரியாமல் சுடவில்லை, கண்ணீர்ப் புகை எழுப்பி சுடவில்லை, இடுப்புக்குக் கீழே சுடவில்லை, நெற்றியைக் குறிபார்த்துச் சுட்டார்கள். இறந்தவர்கள் அனைவரது உடலிலும் நெற்றியில், நெஞ்சில், தலையில்தான் குண்டுகள் பாய்ந்திருந்தன. ஸ்னோலின் என்ற 11 வயது பள்ளி மாணவியின் வாயில் குண்டு பாய்ந்து, தலை வெடித்துச் சாலையில் கிடந்திருக்கிறாள்.

மே 22 ஆம் தேதி இரவு பத்தரை மணிக்கெல்லாம் நான் தூத்துக்குடிக்குச் சென்றுவிட்டேன். வீடுகளுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். என் வாழ்க்கையில் எவ்வளவோ துயரமான சம்பவங்களைப் பார்த்திருக்கிறேன். எவ்வளவோ மரணங்களை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஆனால், “நாங்கள் என்ன பாவம் செய்தோம்? என்றைக்காவது ஒருநாள் சாகத் தான் போகிறோம். எங்கள் பிள்ளை தலை வெடித்து ரோட்டில் கிடந்தாளேய்யா. பச்சப் புள்ளயா” என்று அந்தக் குடும்பம் கதறிய கதறல் என் இதயத்தைப் பிளந்தது.

திரேஸ்புரத்தில், தூக்குவாளியில் சோறு கொண்டு சென்ற ஜான்சி என்கின்ற பெண்ணை, திரேஸ்புரத்துக்காரர்கள் என்றைக்கும் போராட்டத்துக்கு வரக்கூடாது என்பதற்காகச் சுட்டார்கள். தலை வெடித்து மூளை மண்ணில் சிதறியது என்று அந்தக் குடும்பத்தினர் சொன்னார்கள். இப்படிப்பட்ட கொடுமை ஜாலியன்வாலாபாக்கில்கூட நடந்ததாகத் தெரியவில்லையே? இந்தக் கொலைபாதக அரசு வேதாந்தா நிறுவனத்தின் கார்ப்பரேட் கம்பெனிக்காரனுக்காக இந்த படுபாதகச் செயலைச் செய்தது.

வேதாந்தா நிறுவனத்தின் அனில் அகர்வால் என்னைப் பார்த்து ஐந்து நிடம் பேச வேண்டும் என்று ஏழு வருடம் துடித்தான். ஒரு நிமிடம்கூட அவன் முகத்தில் முழிக்க மாட்டேன் என்று சொன்ன தகுதியோடு நான் பேசுகின்றேன். (பலத்த கைதட்டல்) அட்டர்னி ஜெனரலே என்னுடைய அலுவலகத்துக்கு வந்து, “நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். அரை மணி நேரம் உங்களை அனில் அகர்வால் சந்திக்க நினைக்கிறார். நீங்கள் எங்கு வரச்சொன்னாலும் வருவார்” என்றார். நான் பார்க்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். நான் பட்டிக்காட்டு ஆள். பனை மரத்துக்குக் கீழே இருந்து பதநீரே குடித்தாலும் கள் என்று மக்கள் நினைக்கலாம். அப்படிப்பட்ட நினைவில் வளர்ந்து வந்தவன். இவ்வளவு கொடுமையைச் செய்த கொலைபாதக அரசு தூக்கி எறியப்பட வேண்டும். 22 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியன் வெற்றிக்கொடி நாட்டும். மத்தியில் மதச்சார்பின்மையைக் காக்கின்ற ஜனநாயகத்தைக் காக்கின்ற ஆபத்து இல்லாத ஒரு அரசு வேண்டும் நமக்கு. சேவை, சரக்கு வரியைத் தூக்கி எறிகின்ற, நீட் தேர்வை இரத்து செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டார், ரத்து செய்வோம் என்று ராகுல் காந்தி பிரகடனமே செய்துவிட்டாரே. ஆகவே அப்படிப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும்.

இந்த ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் நமது ஆருயிர் சகோதரர் கணேசமூர்த்தி அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *