இங்கிலாந்து கேப்டன் என்ன சொல்கிறார்

2019 உலகக் கோப்பைத் தொடரில் நேற்று ஆஸ்திரேலிய – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் அடித்த சதம் மற்றும் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பெகரன்டார்ஃப், ஸ்டார்க் ஆகியோரின் அதிரடி பவுலிங்கால், 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா. ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெகரன்டார்ஃப், 5/44 என்ற பவுலிங் மூலம் கெத்து காட்டினார். இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம் ஸ்டார்க், தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

முன்னதாக இலங்கையிடம் தோற்றிருந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவிடமும் தோல்வி கண்டுள்ளது. இந்த தொடர் தோல்விகளால் இங்கிலாந்து, அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழக்க வாய்ப்புள்ளது.

அடுத்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை எதிர்த்து களம் காண உள்ளது இங்கிலாந்து. அதில் ஒரு போட்டியிலாவது அந்த அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

தற்போது இங்கிலாந்து, அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில், 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசம் 9 புள்ளிகளுடன் 5வது இடத்திலும், இலங்கை 8 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளன. பட்டியலில் முதல் 4 இடத்தில் இருக்கும் அணிகள்தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால், அடுத்து வரும் நாட்களில் நடக்க உள்ள போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறியுள்ளன.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியை அடுத்து பேசியுள்ள, இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், “இந்தப் போட்டியில் நாங்கள் பெரும்பான்மையான நேரம் சரியாக விளையாடவில்லை என நினைக்கிறேன். எங்களது பவுலர்கள் முதல் இன்னிங்ஸில் நன்றாகத்தான் பந்து வீசினார்கள். ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா, 340 அல்லது 350 அடிக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவ்வளவு ரன்கள் ஸ்கோர் செய்யவில்லை.

இப்போது இருக்கும் நிலைமையை வைத்துப் பார்த்தால், எங்கள் விதி எங்கள் கையில்தான் உள்ளது. வெற்றி பெற்றேயாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அழுத்தம் எங்கள் மீது இல்லை. இனி வரும் இரண்டு போட்டிகளில் நாங்கள் நன்றாக விளையாடினால், கண்டிப்பாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று விடுவோம். ஒரு போட்டியில் இல்லை என்றாலும், இன்னொரு போட்டியில் சோபித்தால் கூட, தகுதி பெற்றுவிடுவோம்.

உண்மையைச் சொல்வதென்றால், இந்தத் தொடர் ஆரம்பித்த போது எங்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது இல்லை. ஆனால், அதை மீண்டும் பெற வேண்டும். எங்கள் திறனை வெளிப்படுத்தி அதைப் பெற வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *