
இங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி
இங்கிலாந்து மற்றும் வெண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியானது சவுத்தம்டன் கிரிக்கெட் மைதானத்தில் 8 ஆம் தேதி துவங்கியது. கொரோன வைரஸ் தாக்கத்தால் 117 நாட்களுக்கு பிறகு நடைபெறும் சர்வதேச போட்டி என்பதால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை இப்போட்டி பெற்றது. இந்த போட்டியில் ரசிகர்களுக்கு நேரடியாக பார்க்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.ரூட் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதால் முதல் முறையாக பென் ஸ்டோக்ஸ் அணியை வழி நடத்தினார்.
2012 ஆம் ஆண்டு முதல் 51 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடிய ஸ்டுவர்ட் பிராட்க்கு இப்போட்டியில் ஆடும் வாய்ப்பை ஸ்டோக்ஸ் வழங்கவில்லை.8 ஆம் தேதி காலையில் கடுமையான மழை பெய்ததால் போட்டி உணவு இடைவேளைக்கு பிறகுதான் ஆரம்பம் ஆனது.
டாசில் வென்ற வென்ற பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் ஐ தேர்வு செய்தார். இந்த முடிவும் இங்கிலாந்து அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. ஈரப்பதமான சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட வெண்டீஸ் அணியின் வேகபந்து வீச்சாளர்கள் இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்களை வேகமாக கைப்பற்றினர். இதனால் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 204 ரன்களில் தனது அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. சிறப்பாக பந்து வீசிய வென்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் 6 விக்கெட்களையும், கேப்ரியல் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 43 ரன்களும், விக்கெட் கீப்பர் பட்லர் 35 ரன்களும், ரோரி பர்ன்ஸ் 30 ரன்களும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய வென்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துவக்க வீரர் பிரத்வெயிட் 65 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். மூன்றாம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு டோரிச் மற்றும் ரோஸ்டம் சேஸ் இணைந்து ஆடிய அற்புதமான ஆட்டதால் வென்டீஸ் அணி 114 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்திய டோரிச் 61 ரன்களும், ரோஸ்டம் சேஸ் 47 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியின் தரப்பில் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களையும், ஆண்டர்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
114 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 42 ரன்களும் சிப்லி 50 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாக் கிரேலி 76 ரன்களும், ஸ்டோக்ஸ் 46 ரன்களும் எடுத்தனர். நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது 249 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என வலுவான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி அதன் பின் சறுக்கலை கண்டது. ஸ்டோக்ஸ் ஆட்டம் இழந்த பின் ஆட்டத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் 64 ரன்களை எடுப்பதற்குள் ஆறு விக்கெட்களை பறி கொடுத்தது இங்கிலாந்து அணி. போட்டியின் ஐந்தாம் நாள் துவக்கத்தில் 313 ரன்களில் ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து.வென்டீஸ் அணியின் கேப்ரியல் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்களை கைபற்றி அசத்தினார்.
அதன் பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வென்டீஸ் அணி 27 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதன் பின் இணைந்த பிளாக்வுட் ,ரோஸ்டன் சேஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ரோஸ்டன் சேஸ் 37 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அதன் பின் வரலாற்று சிறப்பு மிக்க இன்னிங்ஸ் ஆடிய பிளாக்வுட் 95 ரன்களில ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.இருந்தபோதிலும் அதன் பின் ஆறு விக்கெட்களை இழந்து 200 ரன்கள் குவித்த வென்டீஸ் அணி நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்தது. போட்டியில் 99 ரன்களும், 6 விக்கெட்களையும் கைப்பற்றிய பென் ஸ்டோக்ஸ் ஆல் கேப்டன் ஆக தனது அணிக்கு வெற்றியை தேடி தர முடியவில்லை. ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இந்த போட்டியில் ஜொலிக்காத நிலையில் ஸ்டுவர்ட் பிராட் ஐ பெஞ்சில் அமர வைத்த ஸ்டோக்ஸ்ன் நிலைப்பாடு அவரின் கேப்டன் ஷிப் திறமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. காயத்தில் இருந்து விடுபட்டு கடைசி நேரத்தில் அணியில் இடம் பெற்ற வென்டீஸ் வீரர் கேப்ரியல் ஒன்பது விக்கெட்களை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்று அசத்தி உள்ளார்.