ஆசிரியர் பணிக்கு திரும்புகிறார் அலிபாபா தலைவர் ஜாக் மா

சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜாக் மா, இணைய வழி வணிக நிறுவனமான அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து ஒரு வருடத்தில் விலகுவார் என அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் ஜாக் மா அலிபாபாவின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலக போவதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது குறித்து பல செய்திகள் வெளியாகின.

தற்போது தலைமை நிர்வாகியாக இருக்கும் டேனியல் சாங்கிடம் தனது பொறுப்பை ஒப்படைக்கவிருக்கிறார் ஜாக் மா.

உலகளவில் அதிக மதிப்புகள் கொண்ட ஒரு நிறுவனம் அலிபாபா ஆகும். ஒரு வருடத்தில் அதன் மதிப்பு இருமடங்கு வரை உயர்ந்துள்ளது.2019ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று சாங், அலிபாபா நிறுவனத்தின் நிர்வாக தலைவராக பொறுப்பேற்பார் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஒரு வருட காலம் பதவி மாற்றம் சுமூகமாக நடைபெற உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கில பேராசிரியராக இருந்த ஜாக் மா, அலிபாப நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து 1999ஆம் ஆண்டு தொடங்கினார் பின் அது உலகின் மிகப்பெரிய இணையவழி வணிக நிறுவனமாக உருவெடுத்தது.

“தங்களை காட்டிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றே ஆசிரியர்கள் நினைபார்கள் எனவே நானும், நிறுவனமும் திறமையான இளைஞர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வழிசெய்வது சரியாக இருக்கும்” என தனது 54ஆவது பிறந்தாளில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜாக் மா தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பங்குதாரர்கள் சந்திப்பு கூட்டம் வரை அவர் அலிபாபாவின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக தொடருவார்.அலிபாபாவின் நிரந்திர கூட்டாளியாக ஜாக் மா இருப்பார்.

ஒரு ராக் ஸ்டாரை போல் உடையணியும் வழக்கம் கொண்டுள்ள ஜாக் மா மீண்டும் பேராசிரியராகப் போவதாக தெரிவித்திருந்தார்.

“இந்த உலகம் மிகப்பெரியது ஆனால் நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறேன்” என தெரிவித்தார் ஜாக் மா.”ஒரு விஷயத்தை நான் உறுதியாக கூற விரும்புகிறேன். அலிபாபா ஜாக் மாவுக்கானது மட்டுமல்ல ஆனால் ஜாக் மா எப்போதும் அலிபாபாவுக்காக இருப்பார்” என ஜாக் மா மேலும் தெரிவித்தார்.
11 வருடங்களாக அலிபாபாவின் நிர்வாக தலைவராக இருக்கும் ஜாக் மா “சிறந்த திறமையை” வெளிப்படுத்தியுள்ளார் என்று புதிதாக பதவியேற்க இருக்கும் சாங் தெரிவித்துள்ளார்.

ஜாக் மாவின் தற்போதைய சொத்து மதிப்பு 36.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் 2017ஆம் ஆண்டுக்கான சீன பணக்காரர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் ஜாக் மா இருப்பினும் ஒருமுறை ப்ளூம்பெர்க் ஊடக நேர்காணல் ஒன்றில் தான் சம்பாதித்த பணத்தை செலவு செய்ய தனக்கு நேரமில்லை என்று கூறியிருந்தார் அவர்.
ஆங்ஷூவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராராசிரியாக இருந்த ஜாக் மா, அதே நகரில் இருந்த தனது வீட்டில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அலிபாபா நிறுவனத்தை தொடங்கினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *