
திமுக தலைவர் ஸ்டாலினுடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை என்று சத்யராஜ் மகள் திவ்யா சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். இவர் முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். மருந்துப்பொருட்களில் ஊழல் நடப்பதாக இவர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சில பேட்டிகளில் தனது அரசியல் விருப்பதையும் தெரிவித்தார் திவ்யா சத்யராஜ். சமீபத்தில் இவர் திமுக தலைவர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது. மக்களவைத் தேர்தல் நேரம் என்பதால், திவ்யா சத்யராஜ் திமுகவில் இணைந்துவிட்டார் என்று அப்புகைப்படத்தை வைத்து செய்திகள் பரவின. இந்நிலையில் இது தொடர்பாக திவ்யா செல்வராஜ் ”எங்களுடைய குடும்பத்துக்கும், கலைஞரின் குடும்பத்துக்கும் இடையே நீண்ட கால நட்பு இருக்கிறது. அது கலைஞர் இயக்கத்தில் எனது தந்தை நடித்தபோது தொடங்கியது. இப்போது நான் ஸ்டாலினைச் சந்தித்து தனிப்பட்ட முறையிலான எனது தொழில் பற்றி பேசினேன். தமிழகத்தில் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தை மேப்படுத்துவது தொடர்பான எனது திட்டங்கள் குறித்து விவரித்தேன். ஸ்டாலின் என்னை ஊக்குவித்தார். அவர் மீது, அவரது அரசியல் பயணத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால், இந்தச் சந்திப்பின்போது நிச்சயமாக அரசியல் பேசவில்லை” என்று கூறியுள்ளார்.