அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்டோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மத்தியஸ்தர்கள் நடவடிக்கை அனைத்தையும் கேமரா மூலம் பதிவு செய்ய வேண்டும். மத்தியஸ்த குழுவின் பேச்சுவார்த்தை விவரங்கள் தொடர்பான எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிடக் கூடாது.
மத்தியஸ்த நடவடிக்கையில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் குழுவினர் உச்ச நீதிமன்ற பதிவாளரை தொடர்பு கொள்ள வேண்டும். 4 வாரங்களுக்குள் தங்கள் அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். மத்தியஸ்த நடவடிக்கையை 8 வாரங்களுக்குள் மொத்தமாக முடித்துக் கொள்ள வேண்டும். பைஸாபாத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு உத்திர பிரதேச அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.