நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 352 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும் வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். மத்திய அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் மீண்டும் ஆட்சியமைத்த பின்னர் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அதாவது மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் வகையில் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு வரவேண்டும், வீட்டிலிருந்தே பணி செய்யவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்திய மோடி, மூத்த அமைச்சர்கள் புதிய அமைச்சர்களுக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கும் வகையில் கேபினட் அமைச்சர்கள் முக்கிய கோப்புகளை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்திய பிரதமர், இதன்மூலம் வேலைத்திறன் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார். அமைச்சர்கள் அலுவலத்திற்கு வருவதுடன் அவ்வப்போது கட்சி எம்பிக்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கவேண்டும் எனவும் மோடி அறிவுறுத்தினார்.
அதேபோல், அந்தந்த தொகுதி எம்.பிக்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க வேண்டும், பொதுமக்களையும் சந்திக்க வேண்டும், அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் பெரும் வித்தியாசம் இருக்கக்கூடாது என்பது போன்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
முதல் அமைச்சரவை கூட்டத்தில் மோடி அரசு, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.