அமைச்சரவை இன்று கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் காலியாக இருந்த 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் முன்னிலையில் திமுக எம்எல்ஏக்கள் 13 பேர் உறுதிமொழி ஏற்று பதவியேற்றனர். இதேபோல், 9 அதிமுக எம்எல்ஏக்களும் பதவியேற்றனர். சட்டப்பேரவையில் திமுகவுக்கு 88 எம்.எல்.ஏ.க்கள் இருந்த நிலையில் தற்போது 101-ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வரும் 28-ந் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்துக்கு முன்பாக அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று காலை 10 மணியளவில் தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

 

இந்த கூட்டத்தில் சட்டமன்ற தொடரில் அறிவிக்கப்பட உள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் புதிய சட்ட மசோதாக்கள் நிறைவேற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் அனுமதியின் பேரில் அந்த சட்டமசோதா சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *