அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதி வாரத்தில் வியட்நாமில் சந்தித்து பேசினர். இதில் அணு ஆயுதங்களை முழுமையாக கை விட வேண்டும் என அமெரிக்காவும், தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடையை முழுமையாக கைவிட வேண்டும் என வடகொரியாவும் கோரிக்கை விடுத்தன. இதனால் இந்த சந்திப்பு தோல்வியில் முடிவடைந்தது.
இந்த நிலையில் அழிக்கப்படும் என வடகொரியா உறுதி அளித்திருந்த முக்கிய ராக்கெட் ஏவுதளத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பியாங்காங்கில் உள்ள டோங்சாங் ரி ராக்கெட் ஏவுதளத்தில் மறுகட்டமைப்பு பணிகள் நடைபெறுவதை செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகளின் மூலம் அமெரிக்க மற்றும் வடகொரிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது நிரூபணமாகிறது.