மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தமிழகத்தில் தேர்தலை ஒட்டி அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, என்.ஆர்.காங்கிரஸ், புதியதமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியகட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் அதிமுக 20 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் தொகுதிகள் அறிவித்துள்ள நிலையில், அதிமுகவிலும் தொகுதிகள் குறித்த இறுதிப் பட்டியல் நாளை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்கிறது. இக்கூட்டத்தில், தேர்தல் அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.