
புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது
11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கும் நிவர் புயல் இன்று இரவு அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.புதுச்சேரி அருகே இரவு 8 மணிக்கு பிறகு கரையை கடக்கும். புயல் கரையை கடந்த பின்பும் புயலின் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தற்போது நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது. புயலின் வெளிச்சுற்று கரையை தொட்டதன் காரணகாவே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயலின் மையப்பகுதி மட்டுமே 150 கி.மீ விட்டம் கொண்டது. நிவர் புயல் கரையை கடந்த பிறகும் 6 மணி நேரம் அதன் தாக்கம் இருக்கும். நிவர் புயல் காரணமாக கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை 13 முதல் 23 அடி வரை ராட்சத அலைகள் எழும்பும்.
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான கடற்கரை பகுதி கொந்தளிப்புடன் காணப்படும். நிவர் புயல் கரையைக் கடந்தபின் உள் மாவட்டங்களிலும் கன மழை பெய்யும். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.