
இந்திய அணியும் 2019 உலக கோப்பையும்
கிரிக்கெட் விமர்சகர்,பொறியாளர் S.வீரசெல்வம்.
தமிழ்நேரலை
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆனது இங்கிலாந்தில் மே மாதம் 30 ம் தேதி துவங்க உள்ளது. இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கிரிக்கெட் அணிகளும் அத்தொடருக்கு முழு வீச்சில் தயாராகி வருகின்றன. என்னதான் ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்தாலும் உலக கோப்பைக்கு முழு பலத்துடன் இன்னும் தயாராகவில்லை என்றே கூற வேண்டும்.
பொதுவாக இங்கிலாந்து மைதானங்கள் வேக பந்து வீச்சுக்கு உகந்தவை என்பதால் அனைத்து அணிகளும் மூன்று பிரதான வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கவே விரும்பும். ஆனால் இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ராக்கு அடுத்ததாக சொல்லிக் கொள்ளும்படி வேக பந்து வீச்சாளர்கள் யாரும் உருவாகவில்லை. இவர்களில் எவரேனும் ஒருவர் காயமடைந்தாலும் அணியின் பாடு திண்டாட்டம்தான். உமேஷ் யாதவ், சமி, இஷாந்த் ஷர்மா, ஷர்குள் தாகூர், சித்தார்த் கவுள், முகமது சி்ராஜ் போன்றவர்களை அதிக ஒரு நாள் போட்டிகளில் விளையாட செய்து அணியை தேர்வு செய்வது முக்கியமானதாகும்.
அடுத்ததாக இந்திய அணியின் பேட்டிங்கில் நான்காம் நிலையில் இறங்க நிலையான பேட்ஸ்மேன்ஐ இன்னும் கண்டு பிடிக்க முடியவில்லை. தோனி, தினேஷ் கார்த்திக், கெதர் ஜாதவ், மனிஷ் பாண்டே என இறக்கி பார்த்தும் பலன் எதும் இன்னும் கிடைக்கவில்லை. ஒரு அணியின் பேட்டிங் திறனை தீர்மானிக்கும் அந்த இடத்தில் சிறந்த நிலையான வீரரை கொண்டு வருவது அவசியமானது ஆகும்.
தோனி சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தாலும் தற்சமயங்களில் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அவர் பேட்டிங் ஆடும் போது தொடக்கத்தில் அதிக பந்துகளை விரயமாயிக்கி விடுகிறார்.விக்கெட் கீப்பர் அதிரடி பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பதையே ஒர் சிறந்த அணி விரும்பும். அணியில் அவரது செயல்பாடு என்ன என்பதை அவரும் அணி நிர்வாகமும் ஆலோசித்து கொள்ள வேண்டும்.
ஹர்திக் பாண்டியாவை தவிர வேறு ஆல் ரவுண்டர்கள் இல்லாததும் குறையாகும். வெஸ்ட் இண்டீஸ் அணியை போன்று அணியில் நிறைய ஆல் ரவுண்டர்கள் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.
இந்த குறைகளை எல்லாம் போக்கும் பட்சத்தில் உலக கோப்பை ரேஸில் இந்திய அணி முன்னிலையில் ஓடும்.