
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்
இந்தியா – மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பைப் போட்டி நடக்க உள்ளது. இந்த இரு அணிகளும் உலகக் கோப்பைத் தொடரில், இதற்கு முன்னர் விளையாடிய போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. அதற்கு மிகச் சிறந்த உதாரணம், 1983 உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அந்தத் தொடரில் இந்திய அணி மிகவும் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் மிகவும் வலுவான மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது. அப்போது போட்டியைப் பார்த்த பலரும், முதல் இன்னிங்ஸ் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள்தான், கோப்பையை வெல்லும் என்று பார்வையாளர்கள் சொன்னார்கள். ஆனால், இந்தியா, 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. அந்தத் தொடரை அடுத்துதான் இந்திய அணி, கிரிக்கெட் அரங்கில் ஜொலிக்க தொடங்கியது.
இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பையில்:
இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
போட்டிகள்: 8
இந்தியா வெற்றி பெற்றது: 5
வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது: 3
டிரா: 0
இந்த இரு அணிகளும் முதன்முறையாக 1979 உலகக் கோப்பைத் தொடரில்தான் எதிர்கொண்டன. அதே நேரத்தில் 1983 உலகக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் 3 முறை மோதின. அதில் இந்திய அணி, இரண்டு முறை வெற்றியடைந்தது.
1992 ஆம் ஆண்டுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவை ஒருமுறை கூட உலகக் கோப்பையில் வீழ்த்தியது கிடையாது.
1996 (குவாலியர்), 2011 (சென்னை) மற்றும் 2015 (பெர்த்) ஆகிய ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளை தோற்கடித்துள்ளது.